செய்திகள்
இளவயது திருமணங்கள்

ஊரடங்கு காலத்தில் கடந்த 2 மாதங்களில் 19 இளவயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

Published On 2020-06-03 10:32 GMT   |   Update On 2020-06-03 10:32 GMT
தேனி மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதத்தில் 19 இளவயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
தேனி:

18 வயது பூர்த்தியாகாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம். இதுபோன்ற இளவயது திருமணங்கள் செய்து வைக்கப்படுவது குறித்து வரும் தகவல்களின் பேரில் சைல்டு லைன் அமைப்பினர், குழந்தைகள் நலக்குழுவினர், சமூக நலத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இளவயது திருமணங்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் இளவயது திருமணங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த 2 மாதமாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும், இளவயது திருமண ஏற்பாடுகள் எந்தவித தடையும் இன்றி செய்யப்பட்டு வந்துள்ளன.

இதுகுறித்த தகவலின் பேரில் அத்தகைய திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களில் மொத்தம் 19 இடங்களில் இளவயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன. முன்கூட்டியே தகவல் கிடைத்ததால் இந்த திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அதேநேரத்தில் முன்கூட்டியே தகவல் கிடைக்காததால் 2 இடங்களில் திருமணம் நடந்து முடிந்தது தெரியவந்தது. இவ்வாறு இளவயது பெண்ணை திருமணம் செய்த மணமகன் மற்றும் திருமண ஏற்பாடு செய்த பெண்ணின் பெற்றோர் மீது கண்டமனூர், வீரபாண்டி போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மாவட்டத்தில் மொத்தம் 40 இளவயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News