செய்திகள்
உயிரிழப்பு

திருவண்ணாமலையில் கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி

Published On 2020-06-02 15:19 GMT   |   Update On 2020-06-02 15:19 GMT
திருவண்ணாமலையில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை:

தண்டராம்பட்டு தாலுகா ராதாபுரம் அருகில் உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 36), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி விஜி. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்வம் திருவண்ணாமலை கல்நகர் பகுதியில் ஒரு வீட்டில் சாரத்தின் மீது ஏறி நின்று கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகில் சென்ற உயரழுத்த மின்கம்பியில் செல்வத்தின் உடல் உரசியதால் அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் நேற்று செல்வத்தின் உறவினர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கட்டுமான பணியின் போது உயிரிழந்த செல்வத்தின் குடும்பத்திற்கு கட்டிட உரிமையாளர் இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து போலீசார் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து போலீசார் விபத்திற்கு காரணமாக இருந்த கட்டிட உரிமையாளர் இலியாஸ் மற்றும் செல்வத்தை வேலைக்கு அழைத்து சென்ற திருவண்ணாமலை இந்திரா நகரை சேர்ந்த பொன்னுசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News