செய்திகள்
சிக்கன்

கொரோனா வார்டில் இருந்தவர்கள் கோழிக்கறி ஆர்டர் செய்ததால் ஷாக் ஆன மருத்துவர்கள்

Published On 2020-05-21 06:06 GMT   |   Update On 2020-05-21 06:06 GMT
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சில விசித்திர சம்பவங்களும் நடைபெறுகிறது.
சேலம்:

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,191 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 5,882 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8,228 ஆக அதிகரித்துள்ளது.

இப்படி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரிக்க, தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் பாதியில் தப்பியோடும் சம்பவங்களும் நடைபெறுகிறது.

இதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் 4 பேர் ஆன்லைனில் தந்தூரி சிக்கன் ஆர்டர் கொடுத்து வரவழைத்துள்ளனர். ஆர்டரை டெலிவரி செய்ய வந்தவர் மூலம் இச்சம்பவம் கசிந்துள்ளது.

கொரோனா நோயாளிகள் இவ்வாறு செய்தது மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பெரும் சர்ச்சையாகவும் மாறியுள்ளது. இதை தொடர்ந்து நோயாளிகளுக்கு மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News