செய்திகள்
காசி

காசி விவகாரத்தில் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

Published On 2020-05-20 07:10 GMT   |   Update On 2020-05-20 07:10 GMT
காசி விவகாரத்தில் தவறான தகவல்களை மக்கள் நம்பக்கூடாது. யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறினார்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26), இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் டாக்டர், நாகர்கோவிலை சேர்ந்த பெண் என்ஜினீயர் மற்றும் சிறுமி உள்பட 3 பெண்கள் தனித்தனியாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதாவது தங்களுடன் பழகி ஆபாச படம் எடுத்து பணம் பறித்ததாக புகார் அளித்தனர். அதன்பேரில் காசியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதோடு காசி பயன்படுத்திய செல்போன் மற்றும் லேப்-டாப் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கிடையே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட காசியை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது உதவியாக இருந்த நண்பர் டேசன் ஜினோ என்பவர் சிக்கினார். காசி அனுப்பிய ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட இவர் உதவி செய்திருக்கிறார். இதே போல வெளிநாட்டில் இருக்கும் நண்பரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

காசி வழக்கில் புகார்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யார் மீது புகார் அளிக்கபடுகிறதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை நடத்தும் போது கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு யாரை குற்றவாளியாக சேர்க்க வேண்டுமோ அவர்களை சேர்த்துள்ளோம்.

காசி விவகாரத்தில் தற்போது 6 புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனிப்பட்ட முறையில் ஆதாரங்களை கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆதாரங்களை கொடுப்பவர்களின் பெயர் வெளியே தெரிவிக்கப்படாது. சில நபர்கள் முன்விரோதத்தில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இதை மக்கள் நம்ப கூடாது.

உதவி போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காசி வழக்கில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News