செய்திகள்
திருப்பதி

ஓமியோபதி டாக்டர் கொலையில் வக்கீல் உள்பட 5 பேர் கைது

Published On 2020-05-12 14:16 GMT   |   Update On 2020-05-12 14:16 GMT
திசையன்விளை அருகே நடந்த ஓமியோபதி டாக்டர் கொலை வழக்கில் வக்கீல் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மேலபண்டாரபுரத்தை சேர்ந்தவர் சுயம்பு நாடார் மகன் திருப்பதி (வயது 37). ஓமியோபதி டாக்டர்.

கடந்த 9-ந் தேதி இரவு வேலை முடிந்ததும் அவர் திசையன்விளை மருத்துவமனையில் இருந்து மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இட்டமொழி விஜயஅச்சம்பாடு விலக்கு அருகே சென்றபோது அங்கு மறைந்து இருந்த மர்மநபர்கள் திருப்பதியை வழிமறித்து தாக்கியதுடன் அரிவாளால் வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், அவரது உடலையும், மோட்டார் சைக்கிளையும் அவர்கள் கிணற்றில் வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இந்த கொலை குறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக டாக்டர் திருப்பதியின் பக்கத்து வீட்டை சேர்ந்த கணேசன் மகன் வக்கீல் முத்துகிருஷ்ணன் (30), அவரது நண்பர்கள் முத்தம்மாள்புரம் லிங்கபெருமாள் மகன் சிவா என்ற சிவானந்தம் (28), வள்ளியூர் கோட்டையடி ராஜசேகர் மகன் விமல் என்ற விமலநாதன் (33), முத்துகிருஷ்ணனின் தந்தை கணேசன் (55), அவரது சகோதரர் கவின் ராஜ்குமார் (25) ஆகிய 5 பேரை திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், டாக்டர் திருப்பதிக்கும், வக்கீல் முத்துகிருஷ்ணனுக்கும் வீட்டு முன்பு உள்ள நடைபாதை சம்பந்தமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News