செய்திகள்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழக மக்களின் நலனே அதிமுக அரசுக்கு முக்கியமானதாகும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published On 2020-05-02 10:39 GMT   |   Update On 2020-05-02 10:39 GMT
தமிழக மக்களின் நலனே அ.தி.மு.க. அரசுக்கு அதி முக்கியமானது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்:

மே தினத்தை முன்னிட்டு விருதுநகரில் தனியார் நிறுவன தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேரிடர் காலங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் எந்த அளவுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும், நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டாரோ அதே போன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனா பாதிப்பில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் அனைத்து தரப்பினருக்கும் நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்.

அந்த வகையில் மே தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தை ஜலசக்தி துறையின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுவரை மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இருந்து வந்தது.

அப்போதைய அறிவிப்பால் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்தில் பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக நடைமுறைகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாய நலனுக்கு எதிராகவும், விவசாய தொழிலாளர் நலனுக்கு எதிராகவும் எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்கமாட்டார்.

தமிழக மக்களின் நலனுக்கு எதிராக மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தை அறிவித்தாலோ செயல்பாட்டுக்கு கொண்டு வருவதாக தெரிவித்தாலோ அதனை முதல்-அமைச்சர் ஒரு போதும் செயல்படுத்த அனுமதிக்கமாட்டார். தமிழக மக்களின் நலனே அ.தி.மு.க. அரசுக்கு அதி முக்கியமானதாகும்.

கொரோனா பேரிடரில் இருந்து மக்களை காப் பாற்றுவதே முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

தி.மு.க.வின் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தில் இணைய ஒரே நாளில் 6 லட்சம் பேர் செல்போனில் தொடர்பு கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரேநாளில் 6 லட்சம் பேர் தொடர்பு கொள்வது என்பது சாத்தியப்படுமா?.

தமிழகத்தில் எதிர்கட்சியினர் குறை சொல்லிக் கொண்டு இருப்பது அவர்களின் வேலை. மக்களுக்கான பணிகளை செய்வது எங்களுக்கான வேலை.

இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் நிறுவன உரிமையாளர் முரளிதரன், மதுரை ஏர்போர்ட் அத்தாரிட்டி கமிட்டி உறுப்பினர் எஸ்.எஸ்.கதிரவன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் முத்துப்பாண்டி, மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News