செய்திகள்
கோப்புப்படம்

வங்கிகள் நாளை செயல்படாது- அடுத்தடுத்து 3 நாட்கள் மூடப்படுகின்றன

Published On 2020-04-09 08:27 GMT   |   Update On 2020-04-09 08:27 GMT
அனைத்து தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் மூடப்படுகின்றன.
சென்னை:

கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருக்கிறார்கள். வங்கிகளுக்கு அவசர தேவைக்கு வந்தால் போதும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கிகளிலும் ஊழியர்கள் குறைந்த அளவில் தான் பணியில் ஈடுபடுகிறார்கள். நோய் தொற்று ஏற்படாமல் இருக்க சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படுகிறது.

தற்போது பென்சனர்கள் மற்றும் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க அதிகமாக வருகிறார்கள். இதுதவிர கொரோனாவால் பாதித்தவர்களுக்கு மத்திய அரசின் நிதி உதவி பெறவும் வங்கிக்கு வருகிறார் கள்.

இதன் காரணமாக வங்கி சேவையும் வழக்கம் போல் நீட்டிக்கப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து வங்கிகளும் செயல்படுகின்றன.

இந்த நிலையில் அனைத்து தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் மூடப்படுகின்றன.

நாளை புனித வெள்ளி மத்திய அரசின் விடுமுறை நாள் ஆகும். தொடர்ந்து 2-வது சனிக்கிழமை வங்கிகளின் விடுமுறை நாளாகும். ஞாயிற்றுக்கிழமை பொதுவான விடுமுறை ஆகும்.

3 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடப்பட்டு பின்னர் 13-ந்தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் .அன்று ஒருநாள் மட்டும் வேலைநாள். 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு எனவே அன்றும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

வங்கிகளுக்கு அடுத்தடுத்து விடுமுறை வருவதால் பொது மக்கள் பாதிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.

வங்கிகளுக்கு சென்று பணம் எடுத்தல், பணம் போடுதல், மற்றவர்களுக்கு பணம் மாற்றம் செய்தல் போன்ற வங்கி சேவை பாதிக்கக்கூடும்.

3 நாட்கள் வங்கிகள் மூடப்படுவதால் பொது மக்கள் தங்கள் அவசர தேவைக்கு ஏ.டி.எம்.களை நம்பி இருக்க வேண்டியது உள்ளது. அதனால் அனைத்து ஏ.டி.எம்.களிலும் பணத்தை முழு அளவில் நிரப்புவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த பணியில் ஈடுபடும் வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பணம் தீர்ந்து விட்டால் அதனை உடனே நிரப்பவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மட்டும் வங்கி ஏ.டி.எம்.களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னையில் பெரம்பூர், மூலக்கடை, கொடுங்கையூர் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் பொது மக்கள் தவிக்கிறார்கள். அங்குள்ள ஏ.டி.எம்.களும் பணம் இல்லாமல் மூடப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதுபோன்ற சூழ்நிலையில் ஏ.டி.எம். செயல்பாடுகளை கண்காணித்து தட்டுப்பாடு இல்லாமல் பணம் வினியோகிக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Tags:    

Similar News