செய்திகள்
மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றிய காட்சி.

தஞ்சையில் ரூ.2½ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்- பார் உரிமையாளர் கைது

Published On 2020-04-03 11:30 GMT   |   Update On 2020-04-03 11:30 GMT
தஞ்சையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.2½ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பார் உரிமையாளரை கைது செய்தனர்.
தஞ்சாவூர்:

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் தஞ்சாவூரில் 3 மதுக்கூடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ 2,073 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தடையுத்தரவு அமலில் இருப்பதால் டாஸ்மாக் மதுபானக்கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் தஞ்சாவூரில் சில மதுக் கூடங்களில் தடை உத்தரவை மீறி மதுபானங்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் தஞ்சாவூர் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வடக்கு வீதியில் உள்ள மதுக்கூடத்தில் நேற்று சோதனை செய்தனர். அங்கு தலா 190 மிலி அளவு கொண்ட 627 மதுபாட்டில்கள், தலா 380 மிலி அளவு கொண்ட 168 மதுபாட்டில்கள், 12 பீர் பாட்டில்கள் என மொத்தம் 807 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக மதுக்கூட உரிமையாளர் மனோகர், மேற்பார்வையாளர் ரமேஷ், விற்பனையாளர் வேலு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல கரந்தை தற்காலிக பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக்கடையில் போலீசார் நடத்திய சோதனையில் தலா 190 மிலி அளவு கொண்ட 336 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

இதுகுறித்து மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுக்கடை உரிமையாளர் பாலாஜியை (38) கைது செய்தனர். மேலும் டாஸ்மாக் மேற்பார்வையாளர் ராமலிங்கம், விற்பனையாளர்கள் சுதாகர், தனவேல், மதுக்கடை ஊழியர் முத்து ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் ரெயிலடியில், உள்ள மதுக்கடையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 930 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த 3 இடங்களிலும் மொத்தம் 2,073 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.
Tags:    

Similar News