செய்திகள்
ஒட்டன்சத்திரம் சந்தை

ஒட்டன்சத்திரம் சந்தை 31ம் தேதி வரை மூடல்- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 2 நாள் விடுமுறை

Published On 2020-03-25 03:00 GMT   |   Update On 2020-03-25 03:00 GMT
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் 27 மற்றும் 28 ஆகிய நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அத்தியாவசிய காரணங்களை தவிர பொதுமக்கள் தங்கள்  வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பெரும்பாலான சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. சென்னையின் பிரதான சாலைகள் அனைத்தும் வாகன நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது. 

ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. எனினும் பொதுமக்கள் முண்டியடித்து பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். காய்கறி சந்தைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இது விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. 



சில பகுதிகளில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. ஒரு சில மார்க்கெட்டுகளில் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையின் பிரதான மார்க்கெட்டான கோயம்பேடு மார்க்கெட் இன்று வழக்கம்போல் செயல்படுகிறது. பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் வரும் 27 மற்றும் 28 ஆகிய நாட்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்களுக்கு தேவையாக காற்கறிகள் விநியோகம் செய்தபின்னர், இரண்டு நாட்களுக்கு சந்தை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் கொரோனா அச்சம் காரணமாக திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை மார்ச் 31ம் தேதி வரை மூடப்படுகிறது.  இங்கு நாள் ஒன்றுக்கு 8000 டன் வரை காய்கறிகள் விற்பனை ஆன நிலையில், சந்தை மூடப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வியாபாரிகளுக்கும் கடுமையான இழப்பு ஏற்படும்.
Tags:    

Similar News