செய்திகள்
குண்டர் சட்டம்

பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை: மேலும் 3 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2020-03-15 16:27 GMT   |   Update On 2020-03-15 16:27 GMT
விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் மேலாளர் கொலையில் கைதான மேலும் 3 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
விழுப்புரம்:

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் சீனிவாசன் மகன் தாமோதரன் (வயது 22), ஆனாங்கூரை சேர்ந்த முருகன் மகன் முத்துக்குமார் (23), பொன்னங்குப்பத்தை சேர்ந்த குமார் மகன் ரகு என்கிற ராமச்சந்திரன் (21). ரவுடிகளான இவர்கள் மீது விழுப்புரம் நகரம் மற்றும் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், தகராறு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

கடந்த மாதம் விழுப்புரம் கம்பன் நகரில் உள்ள பெட்ரோல் பங்க் மேலாளர் சீனிவாசன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி நிலைகுலைய செய்து அவரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் தாமோதரன் உள்பட 3 பேரையும் விழுப்புரம் தாலுகா போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர்கள் 3 பேரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்களுடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் தாமோதரன், முத்துக்குமார், ரகு ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். இதையடுத்து தாமோதரன் உள்பட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்கள் 3 பேருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது. ஏற்கனவே பெட்ரோல் பங்க் மேலாளர் சீனிவாசன் கொலையில் தொடர்புடைய அசார், அப்பு ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் தற்போது மேலும் 3 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News