செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தொழிலதிபர்களை விட மனநிறைவுடன் வாழ்பவர்கள் விவசாயிகள் - முதலமைச்சர் பழனிசாமி

Published On 2020-03-07 15:54 GMT   |   Update On 2020-03-07 15:54 GMT
தொழிலதிபர்களை விட மன நிறைவோடு வாழக்கூடியவர்கள் விவசாயிகள் தான் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திருவாரூர்:

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூர் வன்மீகபுரத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் விவசாய சங்கங்களின் சார்பில்  முதல்-அமைச்சர் எடப்பாடி  பழனிசாமிக்கு  பாராட்டு விழா நடைபெற்றது.  இதில்  அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், காமராஜ், உதயகுமார், ஓ.எஸ்.மணியன் மற்றும் விவசாய சங்க முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  

டெல்டா மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலங்களாக அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த பாராட்டு விழாவில், முதலமைச்சர் பழனிசாமிக்கு 'காவிரி காப்பாளன்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

விவசாயிகளின் பாராட்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

தொழிலதிபர்களை விட மனநிறைவுடன் வாழ்பவர்கள் விவசாயிகள் மட்டும் தான். விவசாயிகள், சொந்தக் காலிலே நிற்கக் கூடியவர்கள். வெயில், மழை என்று பாராமல் உழைப்பவர்கள் விவசாயிகள். கண்ணை இமை காப்பது போல பயிரை காப்பாற்றுவது விவசாயி தான். இந்தியாவில் 100க்கு 65 பேர் விவசாயிகளாக வாழ்கின்றனர், நானும் ஒரு விவசாயிதான்.

வேளாண் மண்டல சட்டம் விவசாயத்தை காக்கும்; டெல்டா பகுதி விவசாயிகள் அச்சப்பட வேண்டாம்.  வேளாண் மண்டலம் குறித்த சட்டத்தை நிறைவேற்றியது சிலருக்கு பிடிக்கவில்லை. எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன.

மழைநீர் வீணாகுவதை தடுக்க தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கி பணிகளை செய்து வருகிறோம்.  ஹைட்ரோ கார்பன் போராட்டங்களில், ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற அரசு பரிசீலித்து வருகிறது. இந்த கூட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரையும் முதல்வராகவே பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News