செய்திகள்
தற்கொலை

மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற டிரைவர் தற்கொலை

Published On 2020-03-02 12:02 GMT   |   Update On 2020-03-02 12:02 GMT
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் இன்று மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற டிரைவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரபேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38).

பொக்லைன் வாகன டிரைவர். இவரது மனைவி நதியா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் மனைவியின் நடத்தையில் சக்திவேலுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

நேற்று மதியம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், கத்தியால் தன் மனைவி நதியா கழுத்தை அறுத்தார். நதியா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்த சக்திவேல், கத்தியால் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

படுகாயம் அடைந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு 2-வது மாடியில் உள்ள கட்டிடத்தில் சிகிச்சை பிரிவில் சிங்காரப்பேட்டையே சேர்ந்த ராஜவேல், பாபு ஆகிய 2 போலீசாரின் பாதுகாப்புடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று காலை போலீசார் கண்ணில் இருந்து தப்பிய அவர் ஆஸ்பத்திரி படிக்கட்டு வழியாக ஏறி 5-வது மாடிக்கு சென்றார். திடீரென்று அவர் 5-வது மாடியில் இருந்து குதித்தார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் இறந்த இடத்தில் ரத்தம் சிதறி கிடந்தது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் தர்மபுரி டவுன் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். மனைவியை கொன்று விட்டு மாடியில் இருந்து குதித்து சக்திவேல் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தர்மபுரி டவுன் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.

அவருக்கு பாதுகாப்பாக இருந்த 2 போலீசார் நிலை குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் பணியில் இருந்திருந்தால் டிரைவர் தற்கொலை சம்பவம் நடந்திருக்காது. அதுவும் கொலை குற்றவாளி படிக்கட்டு வழியாக ஏறி 5-வது மாடிக்கு சென்று தற்கொலை செய்யும்போது 2 போலீசாரும் எங்கு நின்றார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News