செய்திகள்
கோப்புப்படம்

கோவையில் முஸ்லிம்கள் 6-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

Published On 2020-02-24 11:36 GMT   |   Update On 2020-02-24 11:36 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தில் கோவையில் முஸ்லிம்கள் 6-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை:

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 19-ந் தேதி முதல் ஆத்துபாலத்தில் உள்ள பள்ளிவாசல் மைதானத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 5-வது நாளாக நடந்த போராட்டத்தில் விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட ஆண்களும், பெண்களும் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் மே.17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் செயலாளர் டாக்டர் ஹபீப் முகமது, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினர்.

நேற்று நடந்த போராட்டத்தின் போது ஒரு சிறுமி தான் சிறுக, சிறுக உண்டியல் மூலமாக சேர்ந்து வைத்து இருந்த பணத்தை ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேனிடம் வழங்கினார். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் அங்கேயே தொழுகை நடத்தி போராட்டத்தை தொடர்ந்தனர். இன்று 6-வது நாளாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பெண்கள் பிரிவினர் தேசிய கொடியை கையில் பிடித்தபடி பேரணியாக சென்றனர். பேரணிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி பெண்கள் பிரிவு கோவை வடக்கு மாவட்ட தலைவர் ராபியா தலைமை தாங்கினார். தேசிய பெண்கள் அமைப்பின் வடக்கு மாவட்ட தலைவர் ரஹ்மத்நிஷா பேரணியை தொடங்கி வைத்தார்.

பெண்கள் அமைப்பு தேசிய செயலாளர் ‌ஷர்மிளா பானு, நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா, எஸ்.டி.பி.ஐ. பெண்கள் பிரிவு மாநில செயலாளர் ஹாலிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த பேரணியில் குழந்தைகளுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

செல்வபுரத்தில் அனைத்து ஜமாத் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், திருச்சி உலமா சபை முகம்மது சிராஜூதீன், அய்யா தர்மயுக வழிப்பேரவை அய்யாவழி பாலமுருகன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
Tags:    

Similar News