செய்திகள்
என்ஐஏ சோதனை

வேலூர் சிறையில் உள்ள சேலம் வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

Published On 2020-02-24 04:15 GMT   |   Update On 2020-02-24 04:15 GMT
களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் உள்ள சேலம் வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சேலம்:

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பாதுகாப்பில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக தவுபிக் (வயது 27), அப்துல்சமீம் (29) மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த சிலரை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.)க்கு மாற்றப்பட்டது.

இந்த கொலை வழக்கில் கைதானவர்களுக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்தவர்கள் மற்றும் தங்குவதற்கு இடம் கொடுத்தவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சேலத்தில் கைதாகி வேலூர் சிறையில் அப்துல்ரகுமான் என்பவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரது வீடு சேலம் முகமதுபுறா பகுதியில் உள்ளது. இவர் அம்மாப்பேட்டையில் செல்போன் கடை வைத்திருக்கிறார். இவரது வீடு மற்றும் கடையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடந்தது.

இவருக்கு சிம்கார்டுகள் சப்ளை செய்த தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மேலும் ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டியில் உள்ள தனியார் நிறுவன அதிகாரி வீட்டிற்கும் நேரில் சென்று சோதனை நடத்தினார்கள். அந்த அதிகாரியிடம் பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

கடலூரில் சர்வதேச தீவிர அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஒருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அந்த நபர் அடிக்கடி சேலத்திற்கு வந்து தங்கி சென்றுள்ளார். அவர் பயன்படுத்திய சிம்கார்டும் சேலத்தில் வாங்கப்பட்டதாகும்.

அந்த சிம்கார்டு மூலம் அவர் சேலத்தில் உள்ள சிலரிடம் பேசி இருக்கிறார். அவர் பேசிய நபர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மீண்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேலம் வந்து சந்தேகிக்கப்பட்ட நபர்களின் வீடுகளில் சோதனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News