செய்திகள்
தங்கம்

ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்தை தாண்டியது

Published On 2020-02-21 07:27 GMT   |   Update On 2020-02-21 09:40 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.34 உயர்ந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்தை தாண்டியது.
சென்னை:

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதனால் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் பதட்டம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தது.



இதனால் சென்னையில் ஜனவரி முதல் வாரத்தில் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வரலாறு காணாத அளவுக்கு பவுன் விலை ரூ.31 ஆயிரத்தை தாண்டியது.

போர் பதட்டம் தணிந்த பிறகு விலை சற்று குறைந்தது. அதன்பிறகு விலை ஏறுவதும், இறங்குவதுமாக நிலையில்லாமல் இருந்து வந்தது.

கடந்த 13-ந் தேதி தங்கம் மீண்டும் பவுனுக்கு ரூ.31 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு கிராம் ரூ.3,889-க்கும், பவுன் ரூ.31 ஆயிரத்து 112-க்கும் விற்பனை ஆனது.

நேற்றும் பவுனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.31,824-க்கும், கிராம் ரூ.3,978-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ.34 உயர்ந்து வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்தை தாண்டியது.

இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 12-ஆக உயர்ந்தது. பவுனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.32 ஆயிரத்து 96-க்கு விற்பனை ஆகிறது.

தங்கம் விலை உயர்வுக்கான காரணம் குறித்து மெட்ராஸ் தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:-

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘கொரோனா வைரஸ்’தான் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். அது உலக பொருளாதாரத்தை மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பங்கு சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

தொழில் துறை சார்ந்த பங்கு சந்தையில் முதலீடு செய்த பெரும் முதலீட்டாளர்கள் அதில் முதலீடு செய்யாமல் தங்கத்தில் முதலீடு செய்து வருவதே இதற்கு முக்கிய காரணமாகும். பங்கு சந்தையின் முதலீடு குறைந்ததால் வீழ்ச்சி அடைந்து பொருளாதாரத்தை பாதித்துள்ளது.

இரண்டாவதாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த வீழ்ச்சி மேலும் அதிகரித்து தங்கம் விலை வரலாற்றிலேயே ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்தை தாண்டியது இதுவே முதல் முறையாகும்.

ஒரு கிராம் ரூ.4,012 ஆக உயர்ந்து உள்ளது. தங்கத்தின் விலை எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்க கூடிய சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் பரவி உள்ளதால் இந்த பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ரூ.700 உயர்ந்து ரூ.52 ஆயிரத்து 300-ஆக உயர்ந்தது. கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.52.30-க்கு விற்பனை ஆகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை உயர்வு (ஒரு கிராமுக்கு) விவரம் வருமாறு:-

தேதி        விலை (ரூ)

11.02.2020    3872    
12.02.2020    3862
13.02.2020    3889
14.02.2020    3889
15.02.2020    3924
16.02.2020    3924
17.02.2020    3902
18.02.2020    3926
19.02.2020    3965
20.02.2020    3978    
21.02.2020    4012
Tags:    

Similar News