செய்திகள்
விபத்தில் உருக்குலைந்த பேருந்து

திருப்பூர் சாலை விபத்து- பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு

Published On 2020-02-20 03:27 GMT   |   Update On 2020-02-20 08:48 GMT
அவினாசி அருகே கேரள அரசு பேருந்தும் கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
அவினாசி:

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சேலத்திற்கு நேற்று நள்ளிரவு டைல்ஸ் கற்கள் ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி புறப்பட்டு சென்றது.

இந்த லாரி இன்று அதிகாலை 3.20 மணியளவில் அவினாசி அருகே உள்ள ராக்கியாபாளையம் பிரிவில் கோவை- சேலம் 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.



அப்போது லாரியின் முன் பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் நிலை தடுமாறிய லாரி கட்டுப்பாட்டை மீறி ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு சுவரை இடித்து கொண்டு எதிர்புறம் உள்ள ரோட்டுக்கு தறி கெட்டு ஓடியது.

அப்போது பெங்களூருவில் இருந்து எர்ணாகுளத்துக்கு கேரள அரசு சிலிப்பர் சொகுசு பஸ் வந்தது. கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி கேரள பஸ்சின் பக்கவாட்டில் வலது புறமாக பயங்கரமாக மோதியது. பின்னர் அரை கிலோ மீட்டர் தூரம் பஸ்சை லாரி இழுத்து சென்றது.

இதனால் லாரி கண்டெய்னர் தனியாகவும், என்ஜின் தனியாகவும் இரண்டாக பிரிந்தது. பஸ்சின் ஒரு பகுதி முழுவதும் உருக்குலைந்தது. பஸ்சின் வலது புறம் இருந்த இருக்கைகள் அனைத்தும் சேதமடைந்தது. பயணிகளுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அதிகாலை என்பதால் தூக்க கலக்கத்தில் இருந்தனர். அவர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டு கதறினர்.

இந்த விபத்தில் கேரள அரசு பஸ் டிரைவர், 6 பெண்கள் உள்பட 19 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள். பஸ்சில் பயணம் செய்த 23 பயணிகள் பலத்த காயமடைந்தனர். பின் சீட்டில் இருந்த 5 பேர் மட்டும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார்கள்.



பலியானவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்ததால் பஸ்சின் இருக்கைகளை உடைத்து அவர்களது உடலை மீட்டனர். ஒரு பெண்ணின் கால்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இரண்டாக உடைந்த நிலையில் இருந்தது. அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கிய மீட்பு பணி காலை 8 மணி வரை நீடித்தது.

விபத்தில் பலியானவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். பலியானவர்கள் பெயர், விவரம் உடனடியாக தெரியவில்லை. காயமடைந்த 23 பேர் திருப்பூர் மற்றும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து நடைபெற்றதும் கண்டெய்னர் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரை தேடும் பணியில் திருமுருகன் பூண்டி போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த விபத்து காரணமாக கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News