செய்திகள்
வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள்

அமைச்சர் பாண்டியராஜன் மீது உரிமை மீறல் பிரச்சினை- திமுக வெளிநடப்பு

Published On 2020-02-18 06:41 GMT   |   Update On 2020-02-18 06:41 GMT
சட்டசபையில் தவறான தகவலை அளித்ததாக கூறி அமைச்சர் பாண்டியராஜன் மீது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு உரிமை மீறல் பிரச்சனையை கொண்டு வந்தார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் மீது திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்தார். 

‘தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியும், அது சாத்தியம் என அமைச்சர் பாண்டியராஜன் கூறி உள்ளார். இதன்மூலம், பேரவையில் தவறான தகவலை அவர் தெரிவித்துள்ளார். அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தங்கம் தென்னரசு பேசினார்.

இதையடுத்து, அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்தார். இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு என்றும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல ஆண்டுகளாக இரட்டை குடியுரிமை பற்றி வலியுறுத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இலங்கை அகதிகளுக்கு இதற்கு முன்பு இந்திய குடியுரிமையே வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.



பின்னர் விளக்கம் அளித்த சபாநாயகர் தனபால், இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியம் என அமைச்சர் பாண்டியராஜன் பேசியதில் அவை உரிமை மீறல் இல்லை என்றார். 

அமைச்சரின் பதில் மற்றும் சபாநாயகரின் முடிவு திருப்தியில்லை எனக் கூறி திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவை நடவடிக்கையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

குடியுரிமை தரும் அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது என்றும், இரட்டை குடியுரிமை விவகாரத்தில் அமைச்சர் பாண்டியராஜன் திசை திருப்புவதாகவும் திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டினார். 


Tags:    

Similar News