செய்திகள்
சென்னை ஐகோர்ட்

முஸ்லிம்களின் போராட்டத்துக்கு தடை கேட்டு வழக்கு

Published On 2020-02-17 09:17 GMT   |   Update On 2020-02-17 09:17 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் முஸ்லிம்களின் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை:

குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த தகவல் வெளியில் பரவியதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களுக்கு மேலாக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வருகிற 19-ந்தேதி சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் முஸ்லிம் அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், பத்திரிகையாளர் வாராகி சார்பில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு ஆஜரான வக்கீல், ‘முஸ்லிம்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் பொதுமக்களுக்கு பெரிதும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த போராட்டத்துக்கு தடை கேட்டு வழக்கு தொடர உள்ளேன். இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரணைக்கு ஏற்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால், நீதிபதிகள் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. முதலில் வழக்கை ஐகோர்ட்டு பதிவுத்துறையில் தாக்கல் செய்யுங்கள்’ என்று கூறினர்.

இதையடுத்து, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு ஆஜரான வக்கீல் இதே கோரிக்கையை முன்வைத்து வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டதா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு, மனு இன்று காலையில் தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக வக்கீல் கூறியதை தொடர்ந்து, இந்த வழக்கை நாளை (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News