செய்திகள்
சிறை தண்டனை

ரெயில் பயணியிடம் 15 பவுன் நகை திருடிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

Published On 2020-02-11 11:01 GMT   |   Update On 2020-02-11 11:01 GMT
கோவையில் ரெயில் பயணியிடம் 15 பவுன் நகை திருடிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை:

கோவை தெலுங்கு பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். தங்க நகை வியாபாரி. சம்பவத்தன்று இரவு இவர் 15 பவுன் தங்க நகையை எடுத்து கொண்டு பெங்களூர் செல்வதற்காக கோவை ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

அங்கு 3-வது நடைமேடையில் தான் கொண்டு வந்த பையை வைத்து கொண்டு ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக காத்திருந்தார். அப்போது அதை நோட்டமிட்ட ஒரு வாலிபர் விஜயகுமார் கொண்டு வந்த 15 பவுன் நகை பையை அவருக்கு தெரியாமல் நைசாக எடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து விஜயகுமார் தான் கொண்டு வந்த பையை பார்த்த போது மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் ரெயில்வே போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பையை திருடிச்சென்ற வாலிபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

மறுநாள் ஒரு வாலிபர் ரெயில்வே 4-வது நடைமேடையில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார். இதை பார்த்த ரெயில்வே போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் திருவாரூர் மாவட்டம் கரியமங்கலத்தை சேர்ந்த குபேரன் (21) என்பதும் அவர் விஜயகுமாரின் தங்க நகை பையை திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். இந்த வழக்கு ஜே.எம்.6 கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி கண்ணன் விசாரித்து குபேரனுக்கு 2 வருடம் சிறைத்தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தங்கராஜ் வாதாடினார்.
Tags:    

Similar News