செய்திகள்
தரகர் ஜெயக்குமார்

குரூப் தேர்வு ஊழல்- தரகர் ஜெயக்குமாரிடம் அதிரடி விசாரணை

Published On 2020-02-08 09:32 GMT   |   Update On 2020-02-08 09:32 GMT
தரகர் ஜெயக்குமார் சொன்ன தகவலின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட சுமார் 100 பேர் விசாரணை வளையத்துக்குள் வருவார்கள் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
சென்னை:

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, குரூப்-2ஏ, குரூப்-2, குரூப்-1 தேர்வுகளில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.

இதற்கு சென்னை முகப்பேர் மேற்கு கவிமணி ரோட்டை சேர்ந்த ஜெயக்குமார், போலீஸ்காரர் சித்தாண்டி, பூபதி ஆகியோர் மூளையாக செயல்பட்டு முறைகேட்டை அரங்கேற்றி உள்ளனர்.

இவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யில் உள்ள சில ஊழியர்களும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும், புரோக்கர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.



இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், போலீஸ்காரர்கள் சித்தாண்டி, பூபதி, விழுப்புரம் அரியூர் கிராமத்தை சேர்ந்த வி.ஏ.ஓ. நாராயணன் உள்ளிட்ட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் முறைகேடுகளுக்கு மூளையாக இருந்த ஜெயக்குமார் நேற்று முன்தினம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருவதால் அங்கு ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை நேற்று போலீஸ் காவலில் எடுப்பதற்காக எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

ஜெயக்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயக்குமாருக்கும், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று வாதிட்டார்.

விசாரணைக்கு வர வேண்டும் என்று போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தால் அவரே நேரில் ஆஜராகி இருப்பார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை குற்றவாளி போல சித்தரித்துவிட்டனர். இதனால் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். போலீசார் காவலில் செல்ல அனுமதிக்க கூடாது என்று வாதிட்டார்.

இதற்கு அரசு தரப்பு வக்கீல் செல்வராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், முறைகேடுகளுக்கு ஜெயக்குமார் தலைமை வகித்தார் என்பதை ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம் காந்தன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். எனவே ஜெயக்குமாரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தர வேண்டும் என்று வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து ஜெயக்குமாரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஜெயக்குமாரை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் துருவி துருவி விசாரணை நடைபெற்று வருகிறது.

முதலில் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த ஜெயக்குமார் தற்போது ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் நான் மட்டும் ஈடுபடவில்லை. என்னைவிட பெரிய பெரிய ஆட்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் உதவியுடன் தான் முறைகேட்டில் ஈடுபட்டேன்.

லட்சக்கணக்கில் இதில் பணம் கிடைத்ததால் ஒவ்வொரு தேர்விலும் முறைகேடு செய்தேன். இதற்காக பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்களை புரோக்கர்கள் அழைத்து வந்தனர்.

அவர்களிடம் முதலிலேயே பணத்தை பெற்றுக்கொண்டு தேவையான ஏற்பாடுகளை செய்வோம். நாங்கள் முறைகேடு செய்வது எங்களுடன் வரும் ஊழியர்களுக்கு நன்றாகவே தெரியும். இதனால் தேர்வு மையத்தில் இருந்து கொண்டு வரப்படும் பரீட்சை பேப்பர்களை நடுவழியில் எளிதில் மாற்றி விடுவோம்.

இதனால் எங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைத்தது. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு பேருக்கு மட்டும் தான் பரீட்சை பேப்பரை மாற்றினோம்.

இதில் எந்த சந்தேகமும் ஏற்படாததால் அடுத்தடுத்து அதிகமானவர்களுக்கு செய்து கொடுத்தோம்.

நாங்கள் செய்த மோசடி முதலில் வெளியில் தெரியாமல்தான் இருந்தது. பயிற்சி மையங்கள் தங்களுக்குள் உள்ள போட்டி காரணமாக தேர்ச்சி விகிதத்தை அதிகமாக விளம்பரப்படுத்தினார்கள்.

இதில் சந்தேகம் ஏற்பட்டதால் சிலர் புகார் செய்துவிட்டனர். இதனால் தான் நாங்கள் செய்த மோசடி வெளியில் தெரிந்துவிட்டது. இல்லை என்றால் சிக்கி இருக்க மாட்டோம்.

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஜெயக்குமாரின் வாக்குமூலத்தை வீடியோவிலும் பதிவு செய்து வருகின்றனர். ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களுக்கும் நேரில் அழைத்து சென்று விசாரிக்க உள்ளனர்.

ஜெயக்குமார் சொன்ன தகவலின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட சுமார் 100 பேர் விசாரணை வளையத்துக்குள் வருவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News