செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

பேச்சுரிமை என்பது வன்முறையை தூண்டும் வகையில் இருக்கக்கூடாது - மதுரை ஐகோர்ட் நீதிபதி கருத்து

Published On 2020-02-07 23:02 GMT   |   Update On 2020-02-07 23:02 GMT
பேச்சுரிமை என்பது வன்முறையை தூண்டும் வகையில் இருக்கக் கூடாது என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
மதுரை:

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகியுமான அன்வர் உசைன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருவிதாங்கோடு பகுதியில் அனுமதி பெறாத கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது பிரதமரை அவதூறாக பேசியதாக தக்கலை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கூட்டம் நடந்து 28 நாட்களுக்கு பின்னர் சிலரின் தூண்டுதலால் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை நாகர்கோவில் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. எனது மகள் திருமணம் நடக்க உள்ளதால், எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நேரில் ஆஜரானார். பின்னர், தன்னுடைய மகளின் திருமணத்தை கருத்தில் கொண்டு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று முறையிட்டார். மேலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசமாட்டேன் என்று உறுதியளித்தார்.

விசாரணை முடிவில், மனுதாரரின் மகள் திருமணத்தை கருத்தில் கொண்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், “பேச்சுரிமை என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால் அது வன்முறையை தூண்டும் வகையில் இருக்கக்கூடாது” என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
Tags:    

Similar News