செய்திகள்
கேசி பழனிசாமி

அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியின் நீதிமன்ற காவல் 21ம் தேதி வரை நீட்டிப்பு

Published On 2020-02-07 15:29 GMT   |   Update On 2020-02-07 15:29 GMT
கோவையில் கைதான அ.தி.மு.க. முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமியின் நீதிமன்ற காவலை வரும் 21-ம் தேதி வரை நீடித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.
கோவை:

திருப்பூர் புறநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் கே.சி. பழனிசாமி.கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோடு பகுதியில் வசித்து வருகிறார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் எம்.எல்.ஏ.வாகவும், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எம்.பி.யாகவும் இருந்தார்.

அ.தி.மு.க. 2 அணியாக பிரிந்து ஒன்றாக சேர்ந்த பின்னர் கே.சி.பழனிசாமிக்கு கட்சியில் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என அவர் டி.வி. விவாதத்தில் கருத்து வெளியிட்டதால், கடந்த 16.3.18 அன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதற்கிடையே, சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் என்பவர் சூலூர் போலீசில் கே.சி. பழனிசாமி மீது புகார் அளித்தார்.

கே.சி. பழனிசாமி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். ஆனால் அவர் தன்னை கட்சியில் இருப்பது போல் சித்தரித்து கட்சி லெட்டர் பேடு, இரட்டைஇலை சின்னம் ஆகியவற்றுடன் சமூக வலை தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதையடுத்து, கே.சி.பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார், கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கைது செய்தனர். அவர்மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சூலூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட கே.சி.பழனிசாமிக்கு நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கே.சி.பழனிசாமி சூலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் நீதிமன்ற காவலை வரும் 21-ம் தேதி வரை நீட்டித்து சூலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

Similar News