செய்திகள்
ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டிய நபருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இனிப்பு வழங்கிய காட்சி

நாமக்கல்லில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி - போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றியவர்களுக்கு இனிப்பு

Published On 2020-02-04 18:18 GMT   |   Update On 2020-02-04 18:18 GMT
நாமக்கல்லில் நேற்று நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றியவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அருளரசு இனிப்பு வழங்கினார்.
நாமக்கல்:

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக விபத்துகளில் சிக்கி இறப்பவர்கள் மற்றும் காயம் அடைபவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதத்தில் இருசக்கர வாகனங்களை ஓட்டிச்செல்பவர்கள் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

அதற்காக நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோடு, ஹெல்மெட் அணிய அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே பொதுமக்களுக்கு முன்உதாரணமாக அரசு அலுவலர்கள் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, அரசு அலுவலர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலெக்டர் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனங்களில் வந்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அப்போது ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பான முறையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை ஓட்டி வந்தவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அருளரசு இனிப்புகளை வழங்கியதோடு, தொடர்ந்து சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் ஹெல்மெட் அணியாதவர்களை, தடுத்து நிறுத்திய போலீசார் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை விளக்கி கூறினர். அதேபோல் ‘சீட் பெல்ட்’ அணிந்து செல்லும்படி காரில் சென்றவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.
Tags:    

Similar News