செய்திகள்
கோப்பு படம்

விழுப்புரத்தில் இன்று மதியம் வெடிகுண்டு வீசி பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை

Published On 2020-02-04 07:30 GMT   |   Update On 2020-02-04 07:30 GMT
விழுப்புரத்தில் இன்று மதியம் வெடிகுண்டு வீசி பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்:

விழுப்புரம்-புதுவை சாலையில் கம்பன் நகர் உள்ளது. இங்கு தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் மேலாளராக சீனிவாசன் என்பவர் இருந்தார்.

இன்று காலை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் மேலாளர் சீனிவாசன் ஆகியோர் இருந்தனர். இன்று மதியம் 12 மணி அளவில் ஒரு காரில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. பின்னர் திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து வீசினர்.

இதில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமானது. குண்டுவீச்சில் அங்கிருந்த மேலாளர் சீனிவாசன் படுகாயம் அடைந்தார். உடனே அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் சிறிதுநேரத்தில் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதை அறிந்ததும் 4 மர்ம மனிதர்களும் காரில் ஏரி மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர். நாட்டு வெடி குண்டு வீசிய சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டு தீ போல பரவியது. இதனால் அங்கு ஏராளமான பொது மக்கள் திரண்டனர்.

இதற்கிடையே வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் விழுப்புரம் போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையே அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வெடித்து சிதறிகிடந்த வெடிகுண்டுகளின் துகள்களை சேகரித்தனர்.

பெட்ரோல் பங்க் மேலாளர் மீது வெடிகுண்டு வீசியது யார்? எதற்காக வீசினார்கள்? முன்விரோதம் காரணமாக வெடிகுண்டு வீசப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் காரில் தப்பி சென்றவர்களை பிடிக்க போலீசார் முடுக்கிவிடப்பட்டனர். கொலையாளிகள் வெளி மாவட்டத்துக்கு தப்பி செல்லாமல் இருக்க மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்அடிப்படையில் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களையும் மறித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News