செய்திகள்
தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

Published On 2020-01-29 16:27 GMT   |   Update On 2020-01-29 16:27 GMT
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, அதிகாரிகளை கண்டித்து 3 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுலைமான். இவர் குவைத் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நவாப் பீவி(வயது 34). இவர்களது வீட்டுக்கு செல்லும் பொதுப்பாதையை சிலர் ஆக்கிரமித்துக்கொண்டு பாதையை விட மறுத்து தடையை ஏற்படுத்தி வந்தனர். 

இதுகுறித்து நவாப்பீவி வேப்பந்தட்டை தாசில்தாரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதை பிரச்சினை தொடர்பாக நவாப் பீவிக்கும், அங்குள்ள சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நவாப் பீவியை சிலர் தாக்கினர். இதனால் விரக்தியடைந்த நவாப் பீவி, அவரது தாய் கதிஜா பீவி, பெரியம்மா தாரா பீவி ஆகியோர் தனது வீட்டுக்கு செல்லும் பொதுப்பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்எண்ணெயை தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது கலெக்டர் அலுவலக பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நவாப்பீவி உள்பட 3 பெண்களையும் தடுத்து நிறுத்தி, மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் வருவாய்த் துறையினர் நவாப் பீவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பாதை பிரச்சினை தொடர்பாக அளவீடு செய்து பிரச்சினையை தீர்த்து வைப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து 3 பெண்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News