செய்திகள்
கொலை

வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சுங்கச்சாவடி காவலாளி அடித்து கொலை

Published On 2020-01-24 08:18 GMT   |   Update On 2020-01-24 08:18 GMT
வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சுங்கச்சாவடி காவலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி:

வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் வெளிவட்ட சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பாட்டுக்கு வந்தது.

மீஞ்சூர் மற்றும் வண்டலூர் பகுதிகளில் மட்டும் இறுதிகட்ட பணிகள் நடை பெற்று வருகிறது.

இந்த சாலையில் சுங்கச்சாவடிகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. சுமார் 4 இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

ஆவடியை அடுத்த நெமிலிசேரி அருகிலும் புதிதாக சுங்கச்சாவடிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு காவலாளியாக திருநின்றவூர் பிரகாஷ் நகரை சேர்ந்த வெங்கடேசன் பணிபுரிந்து வந்தார்.

இந்த சுங்கச்சாவடி அருகில் சாலையோரமாக லாரி டிரைவர்கள் இரவு நேரங்களில் தங்களது வாகனங்களில் ஓய்வு எடுப்பது வழக்கம். நேற்று இரவு இதேபோல அங்கு பல வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

குடியாத்தத்தை சேர்ந்த சிவகுமார் என்ற டிரைவர் தனது லாரியில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 2 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் 2 கொள்ளையர்கள் வந்தனர்.

லாரியில் தூங்கிய டிரைவர் சிவகுமாரை தட்டி எழுப்பிய கொள்ளையர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இரும்பு பைப்பாலும் அடித்தனர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

சிவகுமாரிடம் இருந்த செல்போன், பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் பறித்தனர். இதனால் அவர் சத்தம் போட்டு அலறினார்.

அப்போது காவலாளி வெங்கடேசன் கொள்ளையர்களிடமிருந்து சிவகுமாரை காப்பாற்றும் வகையில் செயல்பட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் வெங்கடேசனையும் இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பிச்சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் அவர் பலியானார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் முத்தா புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். நள்ளிரவில் நடந்த இந்த கொலைச் சம்பவம் பற்றி உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன், அம்பத்தூர் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன் ஆகியோர் கொலையாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

உடனடியாக அந்த பகுதி முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இதில் காவலாளியை அடித்து கொன்ற கொலையாளிகள் இருவரும் சில மணி நேரங்களிலேயே போலீசில் சிக்கினார்கள்.

அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

காவலாளி கொலை செய்யப்படுவதற்கு முன்பு அதே சாலையில் உள்ள ராமாபுரம் அருகிலும் கொள்ளையர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

வேப்பம்பட்டை சேர்ந்த அசோக்குமார் என்பவர் பணிமுடிந்து நள்ளிரவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது இதே கொள்ளையர்கள் அவரை வழிமறித்து பணம், செல்போனை பறித்ததுடன் அவரது புல்லட்டையும் பறித்துக் கொண்டனர்.

கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த அசோக்குமார் இதுபற்றி பட்டாபிராம் போலீசில் புகார் செய்துள்ளார். 2 கொள்ளையர்களும் இந்த 2 சம்பவங்களிலும் ஈடுபடுவதற்கு முன்பு இதேபோன்று வேறு யாரிடமும் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார்களா என்றும் விசாரணை நடை பெற்று வருகிறது.

சென்னை புறநகர் பகுதியில் நள்ளிரவில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளை மற்றும் கொலைச்சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் மத்தியிலும் கடும் அதிர்ச்சி நிலவுகிறது.

நள்ளிரவு நேரங்களில் இதுபோன்ற இடங்களில் ரோந்து பணிகளை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News