செய்திகள்
தஞ்சை பெரிய கோவில்

காணும் பொங்கலையொட்டி தஞ்சை பெரியகோவிலில் குவிந்த பொதுமக்கள்

Published On 2020-01-17 09:43 GMT   |   Update On 2020-01-17 09:43 GMT
காணும் பொங்கலையொட்டி தஞ்சை பெரியகோவிலில் குவிந்த பொதுமக்கள் கோவில் கட்டிட கலையை பார்த்து ரசித்தனர். மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தஞ்சாவூர்:

பொங்கல், மாட்டுப் பொங்கலை தொடர்ந்து காணும் பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

காணும் பொங்கல் என்றாலே சுற்றுலா தலங்களுக்கு சென்று உற்றார், உறவினர்களுடன் பேசி பொழுது போக்குவது வழக்கம். இதையொட்டி தஞ்சையில் முக்கிய சுற்றுலா தலங்களான பெரியகோவில், மணிமண்டப பூங்கா, அரண்மனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காணும் பொங்கலை கொண்டாட தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வேன்கள், கார்கள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்தோடு தஞ்சைக்கு வந்திருந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தஞ்சைக்கு வந்திருந்தவர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் பெரிய கோவிலில் குவிந்திருந்தனர். கோவில் கட்டிட கலையை பார்த்து ரசித்தனர். இதேபோல் மணிமண்டப பூங்காக்களில் குடும்பத்தோடு அதிகமானோர் வந்திருந்தனர். அங்குள்ள ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பொருட்களில் தங்களது குழந்தைகளை வைத்து அவர்களும் விளையாடி மகிழ்ந்தனர்.

உறவினர்களுடன் புற்களில் அமர்ந்து பேசினர். சிறுவர்கள் ஓடி ஆடி விளையாடினர். மக்களின் கூட்டத்தால் பூங்கா நிரம்பி வழிந்தது. பூங்கா வெளியே நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்காலிக கடைகள் ஏராளமாக முளைத்தன. அவற்றில் வியாபாரம் களைகட்டியது.

தஞ்சையில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பெரிய கோவில், பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திரையரங்குகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தஞ்சை முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் பொதுமக்களின் செயின், பணத்தை திருடும் வாய்ப்பு இருப்பதால் அதனை தடுக்க போலீசார் மக்கள் கூடும் இடங்களில் ரோந்து சென்றனர். மப்டியிலும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு செய்யப்பட்டது.

காணும் பொங்கலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தஞ்சைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

காணும் பொங்கல் கூட்ட நெரிசலில் சிக்கி சிறுவர், சிறுமிகள் மாயமாகி விடக்கூடாது என்பதற்காக குழந்தைகளின் கையில் பெயர், பெற்றோர் பெயர் மற்றும் பெற்றோரின் கைபேசி எண் ஆகியவற்றை அட்டை ஒன்றில் எழுதி வைத்து கொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News