செய்திகள்
விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள், சமத்துவ பொங்கல் கொண்டாடியபோது எடுத்த படம்.

விழுப்புரம் அரசு கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா

Published On 2020-01-11 18:32 GMT   |   Update On 2020-01-11 18:32 GMT
விழுப்புரம் அரசு கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழுப்புரம்:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று காலை சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரமா தலைமை தாங்கினார். துணை முதல்வர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். துறைத்தலைவர்கள் செல்வராணி, தாமோதரன், செந்தில்வடிவு, ரேவதி, தனசேகரன் உள்பட அனைத்துத் துறைகளின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் மாணவிகள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்தபடி கலந்துகொண்டு கல்லூரி வளாகத்தில் புதுப்பானையில் பொங்கலிட்டு வழிபட்டனர். பின்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

விழாவையொட்டி உறியடி, கயிறு இழுத்தல், சிலம்பாட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. அனைத்து போட்டிகளிலும் மாணவிகள் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

இதேபோல் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாணவ- மாணவிகள் பலர் பாரம்பரிய உடையணிந்தபடி கலந்துகொண்டு புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். பின்னர் அனைவரும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
Tags:    

Similar News