செய்திகள்
போராட்டம்

அம்மாண்டிவிளையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

Published On 2020-01-07 09:13 GMT   |   Update On 2020-01-07 09:13 GMT
மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை சந்திப்பில் இருந்து திருநயினார் குறிச்சி செல்லும் சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட் டது.

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை டாஸ்மாக் கடை ஊழியர்கள் ஏற்கனவே கடை இருந்து பூட்டப்பட்ட கடைக்கு அருகில் இருந்த மற்றொரு கட்டிடம் ஒன்றில் டாஸ்மாக் மது வகைகளை இறக்கினார்கள். இதுபற்றிய தகவல் அந்த பகுதி மக்களிடையே காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், கிராமமக்கள் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணசாமி, பாரதிய ஜனதா இளைஞரணி துணைத்தலைவர் சிவக்குமார் மற்றும் பாலசுப்பிரமணியன், ஈஸ்வர பாக்கியம் உள்பட ஏராளமானோர் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சிலர் டாஸ்மாக் கடையை திறக்கவேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினருக்கு மோதல் ஏற்படக் கூடிய சூழல் உருவானது. இதையடுத்து மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டாஸ்மாக் அதிகாரிகள் வந்து கடையை திறக்க மாட்டோம் என்று உறுதி அளித்தால்தான் கலைந்து செல்வோம் என்று கூறினார்கள்.

இதனால் சுமார் 3½ மணி நேரம் போராட்டம் நீடித்தது. இரவு 9.30 மணி அளவில் டாஸ்மாக் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இங்கு டாஸ்மாக் கடையை திறக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News