செய்திகள்
மதுரை மத்திய சிறை

குடியுரிமை சட்டதிருத்த மசோதா - மதுரை மத்திய சிறையில் 2 பெண் கைதிகள் உண்ணாவிரதம்

Published On 2019-12-25 05:33 GMT   |   Update On 2019-12-25 05:33 GMT
குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி மதுரை மத்திய சிறையில் 2 பெண் கைதிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
மதுரை:

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தசரதன் மனைவி செண்பகவள்ளி (வயது 38). மாவோயிஸ்டு ஆதரவாளரான இவர், பெரியகுளம் பகுதியில் ஆயுத பயிற்சி பெற்றதாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் மத்திய அரசின் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சிறை நிர்வாகத்திடம் கடந்த 23-ந்தேதி மனு கொடுத்தார். அதன் பின்னர் அவர் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

இருப்பினும் அவரது மனுவை சிறை நிர்வாகம் தள்ளுபடி செய்துவிட்டது. செண்பகவள்ளியிடம் உண்ணாவிரதம் தொடர்பாக சிறை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதற்கு பலன் இல்லை.

இந்த நிலையில் செண்பகவள்ளி நேற்று மீண்டும் சிறை நிர்வாகத்திடம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மனு கொடுத்து விட்டு சாப்பிடாமல் இருந்து வருகிறார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக செண்பகவள்ளியின் உண்ணாவிரத போராட்டம் 2-வது நாளாக இன்று தொடர்கிறது. மதுரை மத்திய சிறை நிர்வாகம் செண்பகவள்ளியின் உண்ணாவிரதம் குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை.

செண்பகவள்ளியுடன் ஜெயசுதா என்ற பெண் கைதியும் இன்று உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். சென்னையைச் சேர்ந்த இவர், மேலூர் அருகே நடைபெற்ற கார் டிரைவர் கொலை வழக்கில் கைதானவர் ஆவார்.

Tags:    

Similar News