செய்திகள்
சென்னை விமான நிலையம்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு

Published On 2019-12-24 18:54 GMT   |   Update On 2019-12-24 18:54 GMT
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைக்காக விடுமுறை விடப்பட்டதால் பல்வேறு ஊர்களுக்கு செல்ல விமானங்களில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
ஆலந்தூர்:

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் மற்றும் வெளி மாநிலத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி விட்டனர்.

இந்த நிலையில், ரெயில்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்து விட்டு ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் அதிக அளவில் உள்ளது.

மேலும் தனியார் ஆம்னி பஸ்களில் அதிகமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. சொகுசு பயணம், பயண நேரம் குறைவு, பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது விமான சேவையை பலரும் விரும்பத் தொடங்கி உள்ளனர்.

இதன் காரணமாக விமான டிக்கெட் எடுப்பதிலும் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. இதனால் விடுமுறை காலம், பண்டிகை காலங்களில் பெரும்பாலானோர் பயணம் செய்வதால் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தி விமான நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன. இதனால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

புத்தாண்டையொட்டி 30, 31-ந்தேதிகளில் பல விமானங் களில் டிக்கெட்டுகள் முழுவதும் விற்று விட்டன. சென்னை யில் இருந்து தூத்துக்குடிக்கு விமான டிக்கெட் நேற்று மட்டும் ரூ.13 ஆயிரம் வரை கட்டணமாக இருந்தது. வருகிற 28-ந்தேதி வரை ரூ.7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை டிக் கெட் கட்டணமாக உள்ளது.

மதுரை செல்வதற்கு கட்டணமாக ரூ.9,700 முதல் 15 ஆயிரம் வரையும், கோயமுத்தூருக்கு ரூ.3,700-ல் இருந்து ரூ.6 ஆயிரம் வரையும் டிக்கெட் கட்டணங்களாக வசூலிக்கப்படுகின்றன. இதுபோல் கொச்சி, திருவனந்தபுரம், ஹுப்ளி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கான டிக்கெட்டுகளும் இருமடங்காக விற்கப்படுகிறது.

சாதாரணமாக மற்ற நாட்களில் சென்னையில் இருந்து தூத்துக்குடி, கொச்சி, திருவனந்தபுரத்துக்கு ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் வரையும் மதுரை, பெங்களூரு, கோவை ஆகிய நகரங்களுக்கு ரூ.2,500-ல் இருந்து ரூ.6 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 25 நாட்கள் இருப்பதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே உள்ளது.
Tags:    

Similar News