செய்திகள்
சசிகலா

வருமான வரி விசாரணை விவகாரம்- சசிகலாவின் மனு ஐகோர்ட்டில் முடித்து வைப்பு

Published On 2019-12-21 03:35 GMT   |   Update On 2019-12-21 03:35 GMT
வருமான வரி விசாரணை தொடர்பான சசிகலாவின் மனுவை சென்னை ஐகோர்ட்டு முடித்து வைத்து உத்தரவிட்டது.
சென்னை:

சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில் சசிகலா தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளின் விவரங்களை வருமான வரித்துறையினர் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

இதில் சில விளக்கங்கள் கேட்டு பெங்களூரு சிறையில் இருந்து வரும் சசிகலாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. மறுமதிப்பீடு தொடர்பான விசாரணையின்போது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி அளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று சசிகலா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘எனக்கு எதிராக சேகரித்த சாட்சியங்களின் விவரங்கள் மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறை வழங்காததால் என் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க முடியவில்லை.

வருமான வரித்துறையிடம் வாக்குமூலம் அளித்த எனது உறவினர்களான கிரு‌‌ஷ்ணப்பிரியா, ‌‌ஷகீலா, விவேக் ஜெயராமன், டாக்டர் சிவக்குமார் உள்ளிட்ட 14 பேரிடமும், எனக்கு சொந்தமானதாக கூறப்படும் நிறுவனங்களின் மேலாளர்கள் மற்றும் ஆடிட்டர்களிடமும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்.

அதுவரை மதிப்பீடு தொடர்பாக வருமான வரித்துறை உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சசிகலாவின் வருமான வரி கணக்கு தொடர்பான மதிப்பீட்டு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்து விட்டதால் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று வாதாடினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News