செய்திகள்
கைது

மதுரையில் 3 வழிப்பறி கொள்ளையர்கள் கைது

Published On 2019-12-09 09:42 GMT   |   Update On 2019-12-09 09:42 GMT
பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து செல்போன்கள், நகைகளை பறிமுதல் செய்தனர்.

மதுரை:

மதுரை மாநகரில் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்து வழிப்பறியில் ஈடுபடும் கும்பல் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதனைத் தொடர்ந்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர் வாதம் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாநகரின் பல பகுதிகளில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், நகை-பணம் மற்றும் செல்போன்களை வழிப்பறி செய்ததாக புகார்கள் வந்தன.

இதனைத் தொடர்ந்து துணை கமி‌ஷனர் பழனி குமார் மேற்பார்வையில் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் கீதா தேவி தலைமையில் தனிப்படையினர் அதிரடி சோதனையில் இறங்கினர். வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் இருந்த சி.சி.டி.வி. கேமிராக்கள் மூலம் குற்றவாளிகளின் மோட்டார் சைக்கிள் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற வாகன சோதனையில் ஒபுளா படித்துறை அருகே உள்ள சோதனை சாவடி பகுதியில் தனிப்படையினர் நின்றபோது வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்களது பெயர் வில்லாபுரம் ஜெல் என்ற சல்மான்கான் (வயது 23), நெல்பேட்டை அப்துல் ரகுமான் (19), முகமது அன்சாரி (18) என தெரியவந்தது.

இவர்கள் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் வழிப்பறிகளில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் நகைகள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 3 பேரும் இரு சக்கர வாகனங்கள் திருட்டிலும் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.

மேலும் நகரில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உதவும் வகையிலும், வீடுகள், கடைகள் மற்றும் பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தவும் அவர் வலியுறுத்தினார்.

Tags:    

Similar News