செய்திகள்
மாயம்

ஒரத்தநாடு அருகே நகை-பணத்தை எடுத்துக்கொண்டு 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

Published On 2019-12-05 11:11 GMT   |   Update On 2019-12-05 11:11 GMT
ஒரத்தநாடு அருகே மாமனார் வீட்டில் இருந்து நகை-பணத்தை எடுத்துக்கொண்டு 2 குழந்தைகளுடன் பெண் மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார்.
ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே புதூர் கிராமம் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 59) கூலி தொழிலாளி. இவரது மகன் திருஞானசம்பந்தம் (35). இவருக்கும் ஒரத்தநாடு அருகே ஓக்கநாடு கீழையூர் பகுதியை சேர்ந்த ரத்தினம் மகள் வினோதா என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு திருஞானசம்பந்தம் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார்.

இதையடுத்து வினோதா தனது 2 குழந்தைகளுடன் தனது மாமனார் தமிழரசன் வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தமிழரசன் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவியும் கடைக்கு வெளியில் சென்றுவிட்டார். இரவு இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் இல்லை. மேலும் வீட்டில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை, ரூ. 12 ஆயிரம் ரொக்கமும் மாயமாகி இருந்தது.

உறவினர்கள் மற்றும் வினோதாவின் தோழிகள் வீட்டிற்கு தொடர்பு கொண்டு தமிழரசன் விசாரித்தார். ஆனால் வினோதா எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ஒரத்தநாடு போலீசில் தமிழரசன் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணா வழக்குப்பதிவு செய்து மாயமான வினோதா மற்றும் அவரது குழந்தைகளை தேடி வருகிறார்.
Tags:    

Similar News