செய்திகள்
விஷவாயு தாக்கியதில் உயிரிழந்த அருண்குமார்

வி‌ஷவாயு தாக்கி வாலிபர் பலி- மனித கழிவை மனிதனே அகற்றும் தடை சட்டத்தில் நடவடிக்கை

Published On 2019-11-13 09:57 GMT   |   Update On 2019-11-13 09:57 GMT
சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் விஷவாயு தாக்கியதில் வாலிபர் பலியானது தொடர்பாக மனித கழிவை மனிதனே அகற்றும் தடை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அருண்குமார் என்ற வாலிபர் நேற்று காலை உயிரிழந்தார்.

தனது தம்பி ரஞ்சித்குமார் கழிவு நீர் தொட்டியில் மயக்கம் அடைந்த போது அவரை காப்பாற்றி வெளியில் தூக்கி விட்டபோதுதான் அருண் குமார் வி‌ஷவாயு தாக்கி பலியானார்.

இதுதொடர்பாக அண்ணாசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கழிவுநீர் அகற்றும் பணியை மேற்கொண்ட ஒப்பந்த தரகர் மற்றும் வணிக வளாகம் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விபத்து ஏற்படும் வகையில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு தடை உள்ளது. இந்த தடையை மீறி செயல்படுபவர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. மனித கழிவுகளை மனிதனே அகற்றும் சம்பவங்கள் பல இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை.

இந்த நிலையில் வணிக வளாகத்தில் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்திய குற்றத்துக்காக அதுதொடர்பான தடை சட்டத்தின் கீழ் அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி சென்னையில் போலீசார் நடவடிக்கை எடுப்பது இதுவே முதல் முறையாகும். வெள்ளவேடு போலீசில் இதுபோன்ற வழக்கு ஏற்கனவே போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News