செய்திகள்
அன்பழகன் எம்எல்ஏ

சட்டம்-ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை- அன்பழகன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

Published On 2019-11-12 12:10 GMT   |   Update On 2019-11-12 12:10 GMT
புதுவையில் சட்டம்-ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை மாநில தொழில் வளர்ச்சிக்காக தனிப்பட்ட முறையில் முதல்-அமைச்சர் சிங்கப்பூர் சென்று வந்துள்ளார். அவருடன் தொழில்துறை அமைச்சரும், பிப்டிக் சேர்மன் மற்றும் அதிகாரிகள் சென்றுள்ளதாக தகவல் வெளியானது.

முதல்-அமைச்சரின் சிங்கப்பூர் பயணத்திற்கு பாராட்டு தெரிவிக்கிறோம். இந்த பயணத்தால் வெளிநாட்டு முதலீடு எவ்வளவு வந்துள்ளது? முதல்-அமைச்சர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச மத்திய அரசு அனுமதி அளித்ததா?

புதுவையில் தொழில் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதா? என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும்.

ஏனெனில் அனுமதி பெறாமல் முதல்-அமைச்சர் சிங்கப்பூர் சென்றதாக கவர்னர் கூறியுள்ளார். புதுவையில் புதிய தொழில் கொள்கை அமல்படுத்திய பிறகு ஒரு தொழிற்சாலைகூட புதுவைக்கு வரவில்லை. சிறிய, நடுத்தர தொழிற்சாலைகள் புதுவையை விட்டு வெளி யேறி சென்றுவிட்டன.

தேர்தலின்போது வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஆனால், ஒரே ஒருவருக்கு கூட வேலை தரவில்லை. பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்த பயணத்தில் கவர்னர் கூறுவது உண்மையா? முதல்-அமைச்சர் கூறுவது உண்மையா?

புதுவையில் சட்டம்- ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என பல முறை அ.தி.மு.க. புகார் கூறியுள்ளது. சட்ட மன்றத்திலும் பேசியுள்ளோம். இலவச அரிசி, அரசு சார்பு ஊழியர்களுக்கு சம்பளம், வேலைவாய்ப்பின்மை, பஞ்சாலை மூடல், இலவச துணி என அனைத்தையும் கவர்னர் தடுப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறுவார்.

அதேபோல சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டிற்கும் கவர்னர்தான் காரணம் என சொல்வாரா? அனைத்து பிரச்சினைக்கும் யார் மீதாவது பழிபோட்டு தப்பிக்க அரசு காரணம் தேடி வருகிறது.

புதுவை மக்கள் அமைதியாக வாழும் தகுதியை இழந்துகொண்டே வருகின்றனர். சட்டம்-ஒழுங்கை சீரமைக்க முடியாத பலகீனமான அரசாக புதுவை காங்கிரஸ் அரசு உள்ளது. அங்கன்வாடி உதவியாளர் பணியிடம் நிரப்ப மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அறிவிப்பு வெளியிட்டது. ஏற்கனவே அங்கு பணியில் உள்ள 240 பேர் பணி நிரந்தரம் செய்யக்கோரி வருகின்றனர்.

இந்த நிலையில் உதவியாளர் பணி தேர்வுக்கான அறிவிப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏன் ரத்து செய்தார்கள்? என தனக்கு தெரியாது என துறை அமைச்சர் கூறுகிறார்.

நிர்வாக திறமையின்மை, நிர்வாகத்தில் மோதல், பலகீனம் என அரசு அனைத்து துறையிலும் தோல்வி கண்டு வருகிறது. 3 ஆண்டில் ஒரு அரசு பணியிடத்தைக்கூட அரசு நிரப்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News