செய்திகள்
மெட்ரோ ரெயில்

காற்று மாசுவால் ‘மெட்ரோ’ ரெயிலுக்கு மாறிய பயணிகள்

Published On 2019-11-11 04:13 GMT   |   Update On 2019-11-11 04:13 GMT
காற்று மாசற்ற பயணத்தை மேற்கொள்ள சென்னையில் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக 1 லட்சமாக இருந்தது. ஆனால் விடுமுறை நாட்களில் 50 சதவீத பயணிகளே பயணம் செய்து வந்தனர்.

இதையடுத்து ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டண குறைப்பு சலுகையை தீபாவளி பண்டிகையின்போது மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்தது. இதன் காரணமாக மெட்ரோ ரெயில்களில் விடுமுறை நாட்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டண சலுகை திட்டம் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அலுவலக நாட்களில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



சென்னையில் சமீபத்தில் காற்று மாசு ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் சென்னையில் பயணிகள் காற்று மாசற்ற பயணத்தை மேற்கொள்ள மெட்ரோ ரெயில்களை பயன்படுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிறுவனம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது. அதன் காரணமாகவும் மெட்ரோ ரெயில் பயணத்துக்கு ஏராளமானோர் மாறி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் மெட்ரோ ரெயில் பயணிகளை ஈர்க்கும் வகையில் ஷேர் ஆட்டோ, டாக்சிகள் இயக்கப்படுகிறது. கலை மற்றும் கண்காட்சிகள், உணவு திருவிழாக்கள், மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News