search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Air Pollution"

    • காற்று மாசுபாட்டின் அதிகரிப்பு காரணமாக கருச்சிதைவு ஏற்பட 52 சதவீதம் வாய்ப்பு.
    • ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன.

    சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து பல்வேறு நாடுகளில் வெவ்வேறு கோணங்களில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தற்போது காற்று மாசுபாடு குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன.

     காற்று மாசுபாடு கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவை 50 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், காற்று மாசுபாட்டிற்கும், கருச்சிதைவுக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்து வந்தனர்.

    இந்த குழு, 2009 முதல் 2022 வரை சீன தலைநகரில் வசித்த 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவப் பதிவுகளை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டது. காற்று மாசுபாட்டின் அதிகரிப்பு காரணமாக கருச்சிதைவு ஏற்பட 52 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எரிபொருட்களால் உருவாகும் நச்சு ரசாயனங்களின் அளவிற்கும் இதுவரை ஏற்பட்ட கருச்சிதைவுகளுக்கும் இடையே ஒரு நேரடி தொடர்பையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஆய்வின் தலைமை ஆசிரியருமான, லிகியாங் ஜாங், கர்ப்பத்திற்கு முன்னால் சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் கருச்சிதைவுகளை தடுக்க அல்லது குறைக்க சாத்தியமான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

     "கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பமடைய விரும்புவோர் காற்று மாசுபாட்டிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். இது அவர்களின் சொந்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அவர்களின் கருவின் ஆரோக்கியத்திற்கும்கூட அவசியமாகிறது" என தெரிவித்துள்ள பேராசிரியர் ஜாங் மேலும் கூறுகையில், `இந்த விவகாரத்தில் இன்னும் தொடர் ஆய்வுகள் தேவை' என்று கூறியுள்ளார்.

    காற்றை சுத்தப்படுத்த தற்போது காற்று சுத்திகரிப்பு கருவிகள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையிலும் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு யாராலும் காற்று மாசிலிருந்து தப்பிக்க இயலாது. மேலும் காற்று சுத்திகரிப்பு கருவிகள் வாங்குவதைப்பற்றி ஏழை எளிய மக்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

    ஏனென்றால் அவை விலை உயர்ந்தவை. அதனால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் இயன்ற அளவு முயற்சிக்க வேண்டும். நடந்து செல்லும் தூரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

    • விவசாயிகளின் பண்ணை பொருட்கள் எரிப்பால் புகை மூட்டம் குறையாமல் இருக்கிறது
    • PM 2.5 தாக்கத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என NESDC வலியுறுத்தியது

    தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் மக்கள் தொகை சுமார் 72 மில்லியன். இவர்களில் 1 கோடிக்கும் (10 மில்லியன்) அதிகமான மக்கள், காற்று மாசு தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தாய்லாந்து நாட்டில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அந்நாட்டின் தேசிய பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டு கவுன்சில் (National Economic and Social Development Council) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

    பண்ணை பொருட்களில் தேவையற்றவைகளை எரிக்கும் அந்நாட்டு விவசாயிகளின் பரவலான பழக்கம் மற்றும் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீ ஆகியவற்றால் புகைமூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.

    2024 ஆண்டு தொடங்கி சில மாதங்களே ஆன நிலையில் மாசுபாடு தொடர்பான நோயாளிகள் அதிகரித்துள்ளனர்.


    நுரையீரல் புற்றுநோய், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா மற்றும் இதய கோளாறு போன்ற மாசுபாடு தொடர்பான நோய்களால் நாள்பட்ட கணக்கில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 2023ல் முதல் 9 வாரங்களில் 1.3 மில்லியன் என இருந்தது.

    தற்போது (2024 தொடக்கத்தில்) இந்த எண்ணிக்கை 1.6 மில்லியன் எனும் அளவிற்கு அதிகரித்துள்ளது.

    சுவாச மண்டலத்தை பாதிக்க கூடிய 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைந்த அளவிலான சிறிய, அபாயகரமான துகள்கள் நுரையீரல் வழியாக ரத்த ஓட்டத்தில் நுழைந்து விடுகின்றன. தொடர்ந்து, இத்துகள்கள் கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுத்தி இருமல் மற்றும் மார்பு இறுக்கத்தை ஏற்படுத்த கூடியவை. இது மட்டுமின்றி இவை இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு பாதிப்பை மேலும் அதிகப்படுத்தலாம்.

    இத்தகைய துகள்களை "PM 2.5" என சுகாதார நிபுணர்கள் அழைக்கின்றனர்.

    பொது சுகாதாரத்தில் "PM 2.5" ஏற்படுத்தும் தாக்கத்தை தவிர்க்க தாய்லாந்து அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என NESDC கூறியது.

    தாய்லாந்தில், ஆண்டுதோறும் நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை கரும்பு தோட்டம் மற்றும் நெல் விளைநிலங்கள் ஆகியவற்றில் வைக்கோல் போன்றவற்றை விவசாயிகள் எரிப்பது தொடர்கதையாகி வருவதால் காற்று மாசுபாடு அந்நாட்டில் பெரும் பிரச்சனையாகி வருகிறது.

    • அதிகமாக மூச்சு வாங்குவதற்கு பல காரணங்கள் உண்டு.
    • காற்று மாசுபாடும் இதற்கு முக்கிய காரணங்களாகும்.

    பனிக்காலங்களில் அதிகமாக மூச்சு வாங்குவதற்கு பல காரணங்கள் உண்டு. பனிப்புகையும், மனித செயல்கள் மூலம் உருவாகும் காற்று மாசுபாடும் இதற்கு முக்கிய காரணங்களாகும். மூச்சுத் திணறல், பெருமூச்சுவிடுதல், சுவாசிக்கும் போது விசிலடிப்பது போன்ற சப்தம், வேகமாக மூச்சுவிடுதல் போன்ற பிரச்சினைகள் இருக்கும்?

     வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு கலந்த புகை, தீங்கான விஷம் கலந்த தொழிற்சாலை புகைகள் மற்றும் சில ரசாயனக் கரைசல்களின் புகைகள் போன்றவற்றை உங்களுக்குத் தெரியாமலேயே நாம் சுவாசித்துக் கொண்டிப்போம். இந்த நச்சுப் புகைகள் தான் சுவாச மண்டலத்தை பாதித்து மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.

    மற்ற காலங்களை விட பனிக்காலங்களில் நமது உடல் வெப்ப அளவை விட மிகக்குறைவாக. குளிர்ந்த வெளிக்காற்று இருக்கும். சுவாசப் பிரச்சினை ஏற்பட இது ஒரு காரணம் ஆகும். மருத்துவரையோ அல்லது நுரையீரல் சிகிச்சை நிபுணரையோ அணுக வேண்டும்.

    மருந்தகத்தில் மருந்து- மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதனால் மூச்சுத் திணறல் அதிகமாகும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது ஒரே நாளில் கிடைக்காது. சில காலங்களுக்கு சில விஷயங்களை கடைப்பிடித்தே ஆகவேண்டும்.

     தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

    1) தீங்கு விளைவிக்கக் கூடிய துகள்கள் கலந்த காற்றை சுவாசிக்காமல் இருக்க வேண்டும்,

    2) பதப்படுத்தப்பட்ட உணவுகள், மைதா மாவில் செய்த உணவுகள், இனிப்பு உணவுகள், இறைச்சி உணவு வகைகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

    3) நிறமூட்டிகள், மணமூட்டிகள், சுவையூட்டிகள் சேர்ந்த உணவுகள், குளிர்பானங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

    4) மன நிம்மதியின்மை, மன அழுத்தம் முதலியவைகளும் மூச்சுத் திணறலை அதிகமாக்கும்.

    5) நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் உள்ளவர்கள் குளிரையும், குளிர்ப் பிரதேசங்களையும் தவிர்க்க வேண்டும்.

    6) தினமும் உங்களால் முடிந்த ஏதாவதொரு உடற்பயிற்சியை செய்து உடம்பை சூடாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    7) ஊதுவத்தி, கொசு வத்தி, கற்பூரம் போன்றவற்றின் புகை அருகில் இருக்க வேண்டாம்.

    8) சிகரெட் புகைப்பவரின் அருகில் நிற்கக்கூட செய்யாதீர்கள். நச்சுக்காற்றின் அபாயங்களைத் தவிருங்கள். நலமுடன் வாழுங்கள்.

    • 2050ல் காற்று மாசுபடுதலை முழுவதும் கட்டுப்படுத்த ஸ்பெயின் திட்டமிட்டுள்ளது
    • குறுகிய தூர விமான சேவைகளும் அவசியம் என விமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன

    கடந்த 2 தசாப்தங்களுக்கும் மேலாக, சுற்றுச்சூழல் மாசடைவதால் பருவநிலை மாற்றங்கள் அதிகரிப்பதாக சுற்றுச்சூழல் வல்லுனர்கள் உலகெங்கும் பிரசாரம் செய்து வந்தனர்.

    சமீப சில வருடங்களாக வானிலை தட்ப-வெப்பத்தில் கடும் ஏற்ற இறக்கங்களும், அதிக வெப்பம், பனிப்பொழிவு, மழை, வெள்ளம் என எதிர்பாராத மாற்றங்களும் உலகின் பல நாடுகளில் ஏற்படுவதால், இத்தகைய கோரிக்கைகள் மேலும் வலுப்பெற்று வருகின்றன.

    இதனால், பல உலக நாடுகள் சுற்றுச்சூழல் மாசுபடுதலை குறைக்கும் விதமாக மாற்று எரிசக்தி வழிமுறைகளை உள்ளடக்கிய அனைத்து சாத்தியக்கூறுகளையும் பரிசீலித்து வருகின்றன.

    ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் விமான சேவைகளினால் அதிகரிக்கும் கரியமில வாயு (carbon-di-oxide) சுற்றுச்சூழலை பாதிப்பதை தடுக்க முயற்சிகள் எடுத்து வருகின்றன.


    இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் (Spain), ரெயில் மூலம் கடக்கக்கூடிய தூரங்களுக்கும் பொதுமக்கள் விமான சேவையை பயன்படுத்துவதை குறைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனால், பல தனியார் ஜெட் விமான சேவைகளும் பாதிக்கப்படலாம் என தெரிகிறது.

    2050 வருட இறுதிக்குள் ஸ்பெயினில் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் வெளிப்பாடுகளை பூஜ்ய (zero) நிலைக்கு கொண்டு வர திட்டம் தீட்டியுள்ளது.

    கடந்த சில தசாப்தங்களாக, அதிநவீன ரெயில் இருப்புப்பாதை கட்டமைப்பில் ஸ்பெயின் பெருமளவு முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக, பிற நாடுகளை விட 3 மணி நேர ரெயில் பயணத்தில் ஸ்பெயினில் அதிக இடங்கள் செல்ல முடியும்.


    இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட்டால் 21,000 விமான சேவைகள் பாதிக்கப்படும் என தெரிகிறது.

    அதே நேரத்தில், ஆண்டிற்கு 3 லட்சம் டன்கள் கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்படும்.

    குறுகிய தூர உள்ளூர் விமான சேவைகள் இல்லாமல் நீண்ட தூர விமான சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த இயலாது என விமான போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த வருடம், மற்றோரு ஐரோப்பிய நாடான பிரான்ஸ், இத்திட்டத்தை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.
    • மணலி, பெருங்குடியில் காற்றின் தரக்குறியீடு 277 என்ற அளவில் மோசமான அளவில் உள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி போகிப் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    போகி பண்டிகை அன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் பழைய பொருட்களைத் தீயிட்டு கொளுத்துவது வழக்கமாக இருந்துவந்தது. ஆனால் நாளடைவில் பழைய பொருட்களோடு டயர், டியூப் உள்ளிட்ட பொருட்களையும் தீயில் போட்டு மக்கள் எரிக்கத் தொடங்கி விட்டார்கள்.

    இதனால் போகி பண்டி கை அன்று காற்று மாசு ஏற்படுவது தவிர்க்க முடியாததாக மாறிப் போய் இருக்கிறது.

    அந்த வகையில் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனால் சென்னை மாநகர பகுதிகளும், புறநகர் பகுதிகளும் புகை மண்டலமாக காட்சி அளித்தன. காலை 6 மணியில் இருந்து 8 மணி வரையில் 2 மணி நேரத்துக்கு புகை மூட்டம் நீடித்தது.

    பனிப்பொழிவுடன் புகைமூட்டமும் சேர்ந்து கொண்டதால் முன்னால் யார் செல்கி றார்கள்? என்ன நடக்கிறது? என்பதே தெரியவில்லை. இதனால் சாலைகளில் சென்றவர்கள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடியே சென்றனர். பெரிய கனரக வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் பின்புற விளக்குகளையும் எரிய விட்டபடியே வாகனங்களை ஓட்டிச் சென்றனர். இதன் காரணமாக சாலையில் சென்ற மோட்டார்சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மெதுவாகவே சென்றன. 20-ல் இருந்து 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை ஓட்டிச் செல்ல முடிந்தது.

    இப்படி மெதுவாகவே செல்ல முடிந்ததால் பயண நேரம் அதிகமானது. 30 நிமிடத்தில் செல்ல வேண்டிய பயண நேரம் ஒரு மணி நேரமானது.

    சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட மாநகர பகுதிகள் அனைத்திலும் புகை மூட்டம் நிறைந்து காணப்பட்டது. அதே நேரத்தில் புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் புகைமூட்டம் அதிகமாக இருந்தது. மின்சார ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களிலும் புகைமூட்டம் நிரம்பி காணப்பட்டது.

    இதனால் மின்சார ரெயில் ஓட்டுனர்கள் ஒலி எழுப்பியபடியே ரெயிலை இயக்கிச் சென்றனர். சென்னை மாநகரில் போகி புகையால் பெருங்குடி பகுதியில் காற்று மாசு மிக அதிக மாக காணப்பட்டது.

    பெருங்குடி பகுதியில் காற்றின் தர குறியீடு 289-ஐ எட்டி இருந்தது. இந்த அளவு மணலியில் 272 ஆக பதிவாகி இருந்தது.

    எண்ணூரில் 232 ஆகவும், அரும்பாக்கம் பகுதியில் 216 ஆகவும், ராயபுரம் சுற்றுவட்டாரத்தில் 207 ஆகவும் காற்றின் குறியீட்டு அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

    போகி புகை மூட்டத்துடன் டயர், டியூப்களை எரித்ததால் ஏற்பட்ட நச்சுப் புகையும் கலந்தது. இதனாலேயே காற்று மாசு அதிகரித்து உள்ளது. முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    சளித் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் கூடுதல் சிரமத்தை சந்தித்தனர். மூச்சுத் திணறலால் அதிக பாதிப்புகளை அவர்கள் சந்தித்தனர். போகி பண்டிகையின்போது காற்று மாசு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக டயர், டியூப் உள்ளிட்ட மாசு ஏற்படும் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதனை கண்டு கொள்ளாமல் பொதுமக்கள் டயர், டியூப் உள்ளிட்ட பொருட்களை தீயில் போட்டு எரித்து நச்சுப்புகையை பரவ விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கு புகை மிகவும் ஆபத்தானது.
    • புகை கண்களிலும், தொண்டையிலும் எரிச்சலை ஏற்படுத்தும்.

    தோட்டங்களின் நகரம் என்று அழைக்கப்படும் லாகூரில் காற்றின் தரம் படிப்படியாக குறைந்து வருகிறது. லாகூர் மற்றும் பஞ்சாபின் பல நகரங்களில் காற்று மாசுபாட்டின் பிரச்சனை படிப்படியாக வளர்ந்து வருகிறது. 2020 ஆம் ஆண்டில் உலகில் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் பஞ்சாபில் ஐந்து நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் உள்ள லாகூர் 2022 ஆம் ஆண்டில் உலகின் மிக மோசமான காற்றைக் கொண்ட நகரமாக மாற 10 இடங்களுக்கு மேல் உயர்ந்துள்ளது என்று சுவிஸ் ஏர் பியூரிஃபையர்ஸ் தயாரிப்பாளரின் வருடாந்திர உலகளாவிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெரிய கடலோர நகரமான கராச்சி போன்ற பிற முக்கிய பாகிஸ்தான் நகரங்களின் நிலைமை மிகவும் சிறப்பாக இல்லை. லாகூரின் நிலைமை உலக சுகாதார அமைப்பின் காற்றின் தர வழிகாட்டுதல்களை விட 40 மடங்கு உயர்ந்திருக்கிறது. தோட்டத்தின் நகரத்தில் முன்னோடியில்லாத புகை ஊடுருவும் கூற்றுகளின் சங்கமத்திலிருந்து வருகிறது. காற்று மாசுபாடு தொடர்பான நோய்களால் ஆண்டுதோறும் 128,000 பாகிஸ்தானியர்கள் இறக்கின்றனர் என்று 2019 ஆம் ஆண்டில் உடல்நலம் மற்றும் மாசுபாடு குறித்த உலகளாவிய கூட்டணி மதிப்பிடப்பட்டுள்ளது

    லாகூர் மற்றும் பஞ்சாபைச் சுற்றியுள்ள மாகாணத்தில் காற்று மாசுபாட்டில் 40% தாக்கத்தை ஏற்படுத்தும் அதிக அளவு சல்பர் வாயு கொண்ட வாகனங்கள் இன்னும் அதிகம் உள்ளன. அதிக குடியிருப்பாளர்களுக்கு வழிவகுக்கும் வகையில் அதன் மரங்கள் 70% குறைக்கப்பட்டுள்ளன. லாகூரில் கிடைக்கும் கலப்படமற்ற எரிபொருளின் வடிவம் கூட குறைந்த தரம் வாய்ந்தது. டயர் எரிப்பில் தங்கள் தொழிற்சாலைகளை இயக்கி வரும் தொழில்களால் கூடுதலாக 25% லாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள வளர்ந்து வரும் நகரங்களில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது.

    இந்த சூழ்நிலையில் ஆராய்ச்சியாளர்களைக் கண்டறிந்தது என்னவென்றால்,லாகூர் பள்ளி மாணவர்களில் அதிக அளவு காற்று மாசுபாட்டிற்கு ஆளானவர்களில் கணிசமாக அதிக அளவு சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் வருகிறது என்கிறார்கள். லாகூர், பாகிஸ்தானின் மற்ற பகுதிகளைப் போலவே, புதைபடிவ எரிபொருட்களை நம்பியிருப்பதைக் குறைக்க வேண்டும்.

    "லாகூரில் உள்ள புகை அளவியல் மற்றும் மானுடவியல் கூறுகளின் சங்கமத்தால் ஏற்படுகிறது" என்று ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வள குழுவின் உறுப்பினர் சலீம் அலி கூறினார்.

    மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கு புகை மிகவும் ஆபத்தானது. இது கண்பார்வையை குறைக்கிறது, சுவாசத்தை கடினமாக்குகிறது, மேலும் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிக்கிறது. புகை கண்களிலும், தொண்டையிலும் எரிச்சலை ஏற்படுத்தும். இதன் விளைவாக கடுமையான இருமல், ஆஸ்துமா ஏற்படுகிறது. ஆஸ்துமா அதிகரிப்புகள், ஒவ்வாமை, கண் தொற்று, சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் மற்றும் முன்கூட்டிய மரணத்திற்கு வழிவகுக்கும் இருதய நோயியல் போன்ற அபாயகரமான சுகாதார பிரச்சனைககளுக்கு புகை காரணமாகும்.

    காற்று மாசுபாடு என்பது மரணத்திற்கான முன்னணி ஆபத்து கூறுகளில் ஒன்றாகும். ஆனால் அதன் தாக்கங்கள் மேலும் மேலும் செல்கின்றன. இது உலகளாவிய நோய் சுமைக்கு முக்கிய காரணமாகும்.

    • லாகூரில் பிஎம்2.5 எனும் மாசு காரணிகள் அபாய எல்லையை விட 66 மடங்கு அதிகம் உள்ளது
    • அமீரக நிபுணர்கள் வானில் 48 முறை மேகங்களை எரிக்கும் தூண்டுதலை முன்னெடுத்தனர்

    உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பாகிஸ்தான் 3-வது நாடாகவும் அந்நாட்டின் பஞ்சாப் பிராந்திய லாகூர் நகரம் முதலிடத்திலும் உள்ளது.

    நுரையீரல் வழியாக ரத்தத்தில் கலந்து புற்று நோயை உண்டாக்க கூடிய மாசுப்பொருட்களில் பிஎம்2.5 (PM2.5) எனும் மாசு காரணிகள் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருக்கும் அளவை காட்டிலும் 66 மடங்கு அதிகமாக லாகூர் நகர காற்று மண்டலத்தில் இருப்பதாக சுகாதார அமைப்புகள் எச்சரித்து வந்தன.

    தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் அமில வாயுக்கள், செங்கல் சூளைகளிலிருந்து வரும் புகை, வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை, வயல்வெளிகளில் வைக்கோல் எரிப்பால் கிளம்பும் புகை என பல்வேறு காரணங்களால் பஞ்சாப் பிராந்தியம் முழுவதும் காற்று மாசு அதிகரித்தல் தொடர்கதையாகி வருகிறது.

    காற்று மாசுபடுதல் அதிகரிப்பதால் அந்நகரில் கடந்த சில வாரங்களாக பல வணிக நிறுவனங்கள் வேலை நேரத்தை குறைத்து விட்டன; பள்ளிகளில் விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இத்தகைய முயற்சிகள் பெரிதாக பலனளிக்கவில்லை.

    பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலைந்திருக்கும் காலகட்டத்தில் பெரும் பொருட்செலவில் இதனை தடுக்க அந்நாட்டு அரசாங்கத்தால் இயலவில்லை.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு உதவிட அரபு நாடான ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) முன் வந்தது. வறண்ட பாலைவன நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் செயற்கை மழைப்பொழிவு உண்டாக்குதல் வழக்கமான ஒன்று. சில்வர் ஐயோடைட் (silver iodide) எனும் மஞ்சள் உப்பு, அசிடோன் (acetone) எனும் ரசாயன கலவையுடன் கலக்கப்பட்டு வானில் மேகங்களில் பல முறை எரிக்கப்படும். இதன் மூலம் மழை மேகங்கள் உருவாகி மழைப்பொழிவு தூண்டப்படும்.

    குறைந்தளவு மழைப்பொழிவு கூட காற்றில் உள்ள மாசு காரணிகளை சில நாட்களுக்கு கட்டுப்படுத்தும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

    அதிகளவு அசுத்தமடைந்த காற்றினால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கும் வகையில் க்ளவுட் சீடிங் (cloud seeding) அல்லது ப்ளூ ஸ்கையிங் (blueskying) எனப்படும் செயற்கை மழைகளை வரவழைக்கும் ரசாயனங்களை கொண்ட உபகரணங்களுடன் விமானங்கள் அந்நகரை வலம் வந்தன.

    2 விமானங்களில் செயற்கை மழையை பெய்விக்கும் விஞ்ஞானத்தில் தேர்ந்த ஐக்கிய அரபு நிபுணர்கள் லாகூரில் முயற்சிகளை முன்னெடுத்தனர். 48 முறை மேகங்களை எரிக்கும் தூண்டுதலில் ஈடுபட்டார்கள்.

    இதன் பயனாக லாகூர் நகரின் 10 இடங்களில் மழைத்தூறல் விழுந்ததாகவும், 15 கிலோமீட்டர் பரப்பளவில் அதன் தாக்கம் கண்காணிக்கப்படுவதாகவும் பஞ்சாப் மாநில காபந்து முதல்வர் மோஹ்சின் நக்வி தெரிவித்தார்.

    காற்று மாசுபாட்டினால் ஏற்படும் எதிர்மறை உடல்நல சீர்கேடு ஓவ்வொரு மனிதனின் வாழ்நாளில் 5 வருடங்கள் குறைத்து விடும் சாத்தியக்கூறு உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளாக இந்திய தலைநகர் புது டெல்லியில் காற்று மாசுபடுதல் அதிகரித்து வருவதும், அதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றமே டெல்லி மற்றும் அண்டை மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

    • காற்று மாசு மிகவும் அதிகரித்ததை தொடர்ந்து டெல்லியில் கடந்த 9-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
    • கடந்த 17-ந்தேதி காற்று மாசு 405 ஆக இருந்தது. அது நேற்று 319 ஆக குறைந்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அதிக அளவில் இருந்தது.

    காற்று மாசு மிகவும் அதிகரித்ததை தொடர்ந்து டெல்லியில் கடந்த 9-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    இந்த நிலையில் டெல்லியில் தற்போது காற்று மாசு குறைந்துள்ளது. கடந்த 17-ந்தேதி காற்று மாசு 405 ஆக இருந்தது. அது நேற்று 319 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து டெல்லியில் நாளை (20-ந்தேதி) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. நாளை முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று டெல்லி மாநில அரசு தெரிவித்து உள்ளது.

    அதேபோல் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து இருந்த நேரத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் வாகனங்கள் மற்றும் 4 சக்கர வணிக வாகனங்கள் டெல்லியில் நுழைய தேசிய காற்றுத்தர மேலாண்மை ஆணையம் தடை விதித்து இருந்தது.

    தற்போது காற்று மாசு குறைந்ததை தொடர்ந்து டெல்லி நகருக்குள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் வாகனங்கள் மற்றும் 4 சக்கர வணிக வாகனங்கள் நுழைய விதிக்கப்பட்டு இருந்த தடையும் நீக்கப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சர்வதேச குழு ஒன்று காற்றின் தரத்தை அளவிட்டு பட்டியல் வெளியிட்டுள்ளது.
    • வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும் காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் 2 வாரம் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. தீபாவளிக்கு முன்னர் காற்று மாசு ஓரளவு குறைந்தது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு வெடித்த பட்டாசால் மீண்டும் காற்று மாசு அதிகரித்தது. காற்றின் தரம் குறைந்து நகரம் முழுவதையும் மூடு பனி ஆக்கிரமித்து இருப்பது போல் காணப்படுகிறது.

    எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக இருக்கிறது. இதனால் குழந்தைகள், ஆஸ்துமா நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர். புறநகர் பகுதிகளில் இருந்து காற்று மாசு டெல்லியின் மைய பகுதியிலும் தற்போது தொற்றிக் கொண்டுள்ளது. வரலாறு காணாத வகையில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

    நேற்று மதியம் மத்திய அரசின் ஷபார் செயலியின்படி, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ) 445 ஆக இருந்தது, சில இடங்களில் 520-க்கு மேல் பதிவாகியது.

    101 மற்றும் 200-க்கு இடைப்பட்ட நிலைகள் மிதமானதாகக் கருதப்படுகின்றன.

    அதே சமயம் 201 மற்றும் 300-க்கு இடைப்பட்டவை மோசமானவை. 301 மற்றும் 400 க்கு இடையில் மிகவும் மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் 400 ஐ விட அதிகமான எண்ணிக்கை கடுமையானது என்று கருதப்படுகிறது.

    ஆனால் சில பகுதிகளில் டெல்லியின் காற்றின்தரம் (ஏ.கியூ.ஐ) பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு அதிகமாக உள்ளது.

    டெல்லியின் நச்சுக் காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 25 ல் இருந்து 30 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்று நுரையீரல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    அதிக அளவு மாசுபாடுகளை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது மக்களுக்கு சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.

    இது தோல் மற்றும் கண் எரிச்சலைத் தூண்டும் மற்றும் ஆஸ்துமா, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் திறன் இழப்பு, எம்பிஸிமா, புற்றுநோய் மற்றும் கடுமையான நரம்பியல், இருதய மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்தும்.

    டெல்லி அரசு கடந்த சில ஆண்டுகளாக தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது. இந்தாண்டும் பட்டாசு வெடிக்க தடை விதித்தது. ஆனால் அதையும் மீறி அதிகளவிலான பட்டாசு வெடித்ததே இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணமாகும் என கூறப்படுகிறது.

    வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும் காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்தார். எல்லையில் சோதனை நடத்தினார்.

    அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை மட்டுமே நகருக்குள் அனுமதித்தார். மற்ற வாகனங்களை திருப்பி அனுப்பினார். இதனை கடுமையாக பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தீபாவளிக்கு முன்பு காற்று மாசு குறைவாக இருந்தது. பட்டாசு அதிகளவில் வெடித்ததால் மீண்டும் காற்று மாசு அதிகரித்துள்ளது என்று மாநில அரசும், மத்திய அரசும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    சர்வதேச குழு ஒன்று காற்றின் தரத்தை அளவிட்டு பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 445 என்ற அளவில் உள்ளதாகவும் அது உலகளவில் காற்று மாசு பட்டியலில் டெல்லி முதலிடத்தைபிடித்துள்ளது என்றும் கூறியுள்ளது.

    இந்த பட்டியலில் 6-வது இடத்தில் மும்பையும், 7-வது இடத்தில் கொல்கத்தாவும் உள்ளது.

    • டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.
    • டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை மக்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடினார்கள். பல்வேறு பகுதிகளில் தீபாவளியையொட்டி பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு கடுமையான சூழல் நிலவி வரும் நிலையில் பட்டாசு வெடிக்க டெல்லி அரசு 3வது ஆண்டாக தடை செய்தது. இந்த உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்டும் மறுத்துவிட்டது.

    பட்டாசு வெடிக்க தடை உள்ள நிலையில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

    தெற்கு டெல்லியின் சர்தர்பூர் பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் மக்கள் அதிகளவில் பட்டாசு வெடித்தனர். அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களும் சிறு, சிறு பட்டாசுகளை குழந்தை களுக்கு விற்பனை செய்தனர். தெற்கு டெல்லி யின் கிழக்கு கைலாஷ் பகுதியி லும் சிலர் பட்டாசு வெடித்தனர். ஷாபூர் காட் மற்றும் ஹவுஸ் காஸ் பகுதியில் மக்கள் அதிகளவில் பட்டாசு வெடித்தனர். அப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் ஏராளமானோர் கூடி பட்டாசு வெடித்தனர். இருப்பினும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடித்தது மிகவும் குறைவு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    பட்டாசு வெடிக்க தடை இருந்த போதிலும் மக்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர். இதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    • தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடிக்கப்படுகிறது.
    • மணலியில் காற்று மாசு அளவு 224 ஆக பதிவு.

    சென்னையில் இன்று (நவம்பர் 12) மாலை 4 மணி நிலவரப்படி காற்று மாசு 178 குறியீடாக பதிவாகி இருக்கிறது. நவம்பர் 10-ம் தேதி காற்று மாசு அளவு 83-ஆக இருந்த நிலையில், நேற்றைய காற்று மாசு அளவு 115 ஆகவும், இன்று 178 ஆகவும் அதிகரித்து உள்ளது.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் பட்டாசு வெடித்து வருவதால், காற்று மாசு அதிகரித்து இருக்கும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தகவல்கள் தெரிவித்து உள்ளன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அளவு பதிவு செய்யப்பட்டதில், மணலியில் அதிகபட்சமாக காற்று மாசின் அளவு 224 ஆக பதிவாகி இருக்கிறது.

    இதே போன்று பெருங்குடியில் காற்று மாசு அளவு 221 ஆகவும், ஆலந்தூரில் 188 ஆகவும், வேளச்சேரியில் 179, அரும்பாக்கத்தில் 172 ஆகவும் பதிவாகி உள்ளது. சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் காற்று மாசு அளவு 170-க்கும் அதிகமாகவே பதிவாகி இருக்கிறது.

    • ஆக்டோபர் 28ம் தேதி முதல் நகரம் இரண்டு வாரங்களுக்கு "மிகவும் மோசமான" முதல் "கடுமையான" காற்றின் தரத்தை அனுபவித்தது.
    • புகையிலை பொருட்களை புகைபிடிக்க வேண்டாம், மூடிய வளாகங்களில் கொசுவர்த்திகள் மற்றும் தூபக் குச்சிகளை எரிப்பதைத் தவிர்க்கவும்.

    டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால், மூச்சுத் திணறல் போன்ற உடல் உபாதைகளால் பொது மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அதனால், வாகனங்களில் இரட்டை இலக்க திட்டம் போன்ற நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்தது.

    தீபாவளி நெருங்கி வரும் நிலையில், காற்று மாசு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் டெல்லி சுகாதாரத்துறை பொது மக்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

    அதன்படி, பொது மக்கள் காலை நடைபயிற்சியைத் தவிர்ப்பது முதல் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று வரை டெல்லியில் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு பல நடவடிக்கைகளை அறிவுறுத்தியுள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள், அடிப்படை உடல் உபாதைகள் உள்ள நோயாளிகள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் காற்று மாசுபாட்டின் வெளிப்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்று அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

    இன்று காலை 7 மணியளவில், தலைநகரின் காற்றின் தரக் குறியீடு 219ஆக இருந்தது. இது கடந்த வியாழன் 24 மணி நேர சராசரி 437 உடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். ஆக்டோபர் 28ம் தேதி முதல் நகரம் இரண்டு வாரங்களுக்கு "மிகவும் மோசமான" முதல் "கடுமையான" காற்றின் தரத்தை அனுபவித்தது.

    தீபாவளியைத் தொடர்ந்து காற்றின்தரம் மோசமடையும் என்பதால், டெல்லி அரசின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள பொது சுகாதார ஆலோசனையானது பட்டாசுகளை எரிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

    மெதுவான மற்றும் அதிக போக்குவரத்து சாலைகள், மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு அருகிலுள்ள பகுதிகள், கட்டுமானம்/இடிக்கும் இடங்கள் போன்ற அதிக காற்று மாசு உள்ள இடங்களைத் தவிர்க்கவும். வெளியில் காலை மற்றும் மாலை நடைப்பயிற்சி, ஜாக், ஓட்டம், உடற்பயிற்சி, குறிப்பாக கடுமையான காற்றின் தரக் குறியீடு உள்ள நாட்களில் தவிர்க்கவும்.

    புகையிலை பொருட்களை புகைபிடிக்க வேண்டாம், மூடிய வளாகங்களில் கொசுவர்த்திகள் மற்றும் தூபக் குச்சிகளை எரிப்பதைத் தவிர்க்கவும். மரம், இலைகள், கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்துகிறது.

    மக்கள் தங்கள் கண்களை ஓடும் நீரில் கழுவவும், வெதுவெதுப்பான நீரில் அடிக்கடி வாய் கொப்பளிக்கவும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்பட ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உண்ணவும் அறிவுறுத்துகிறது.

    மூச்சுத்திணறல், மயக்கம், இருமல், மார்பு அசௌகரியம் அல்லது வலி, கண்களில் எரிச்சல் (சிவப்பு அல்லது நீர்நிலை), பொது போக்குவரத்து அல்லது கார் குளங்களைப் பயன்படுத்துதல், வீடுகள் மற்றும் பணியிடங்களுக்குள் பெறுக்குவதற்கு பதிலாக ஈரமான துணிகளைக் கொண்டு அடிக்கடி துடைப்பதை வழக்கமாக செய்யுங்கள்.

    அடிப்படை மருத்துவ நிலைமைகளைக் கொண்ட நோயாளிகள் குறிப்பாக நீண்டகால நுரையீரல் மற்றும் இருதய பிரச்சினைகள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் டெல்லி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    ×