செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

திண்டுக்கல், தேனியில் தொடர் மழை - 5 அணைகள் நிரம்பின

Published On 2019-10-31 09:51 GMT   |   Update On 2019-10-31 09:51 GMT
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக மொத்தம் 5 அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது. நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து 4837 கன அடியாக அதிகரித்தது. நீர் மட்டமும் 127.90 அடியை எட்டியது. அணையில் இருந்து 1640 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

வரு‌ஷநாடு, கண்டமனூர், வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழை காரணமாக மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வைகை அணைக்கு நீர் வரத்து 4049 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 63.78 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 1560 கன அடி நீர் திறக்கப்படுகிறது

கொடைக்கானல் மழை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணை முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி வருகிற 451 கன அடி நீர் உபரி நீராக திறக்கப்படுகிறது. இதே போல் அய்யம்பாளையம் பகுதியில் உள்ள மருதாநதி அணை 70 அடியை எட்டியுள்ளது.

இதனால் அணைக்கு வரும் 70 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. மருதாநதியில் கூடுதல் தண்ணீர் வருவதால் கரையோர பகுதி மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி, கோம்பைபட்டி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதே போல் சோத்துப்பாறை அணை நிரம்பி அணையின் நீர் மட்டம் 126.87 அடியாக உள்ளது. இதனால் அணைக்கு வரும் 359 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. இதன் காரணமாக வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரையையும் ஒட்டியபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே ஆற்றை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் மற்றும் கரையோரத்தில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழை காரணமாக உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி சண்முகாநதி நீர் தேக்கத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. முழு கொள்ளளவான 52 அடியை எட்டியதால் அணைக்கு வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் மும்முரமாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சண்முகா நதி அணை 1 ஆண்டுக்கு பின்னர் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் பழனி வரதமாநதி அணையயும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால் உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக மொத்தம் 5 அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பெரியாறு 20, தேக்கடி 25.6, கூடலூர் 34.2, உத்தமபாளையம் 32.1, சண்முகாநதி அணை 41, வீரபாண்டி 22, வைகை அணை 36.6, மஞ்சளாறு 60, சோத்துப்பாறை 64, திண்டுக்கல் 16.7, நத்தம் 51, பழனி 12, சத்திரப்பட்டி 21.2, வேடசந்தூர் 16.5, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 15.6, காமாட்சிபுரம் 10.3, கொடைக்கானல் 72.6, கொடைக்கானல் போர்ட் கிளப் 140 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ராஜகோபாலன்பட்டியைச் சேர்ந்த பாண்டி (வயது 42). கூலித் தொழிலாளி. கன மழை காரணமாக இவரது வீட்டின் தெற்கு சுவர் வெளிப்புறமாக இடிந்து விழுந்தது. இதனால் பாண்டி மற்றும் அவரது மனைவி லெட்சுமி, மகன்கள் கணேசன், ஈஸ்வரன் ஆகியோர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

வெளிப்புறமாக விழுந்ததால் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. இருந்த போதும் வீடு இடிந்ததால் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர். எனவே அரசு தங்களுக்கு பசுமை வீடு கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News