செய்திகள்
கத்திகுத்து

கடையாலுமூடு அருகே டியூசன் ஆசிரியையை கத்தியால் குத்திய மாணவர்

Published On 2019-10-24 14:08 GMT   |   Update On 2019-10-24 14:08 GMT
கடையாலுமூடு அருகே டியூசன் ஆசிரியையை தாக்கி கத்தியால் குத்திய மாணவர் போலீசில் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

கடையாலுமூடு பகுதியை சேர்ந்த பி.எஸ்.சி., பி.எட். பட்டதாரி பெண் ஒருவர் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த சில மாணவர்கள் டியூசன் ஆசிரியை வீட்டிற்கு சென்று பாடம் படித்து வந்தனர். அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் ஒருவரும் ஆசிரியை வீட்டிற்கு டியூசனுக்கு சென்று வந்தார். நேற்று காலையில் டியூசன் ஆசிரியையின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் வீட்டில் ஆசிரியை மட்டும் தனியாக இருந்தார். 

நேற்று அந்த பிளஸ்-1 மாணவர் பள்ளிக்கூடத்திற்கு செல்லவில்லை. இதனால் அவர் ஆசிரியை வீட்டிற்கு சென்று அவரிடம் பேசிக் கொண்டிருந்தார். ஆசிரியையும் மாணவரிடம் சகஜமாக பேசினார். அப்போது திடீர் என்று மாணவர் ஆசிரியையின் கையை பிடித்து இழுத்து அவரை தாக்கி உள்ளார். 

இதனால் பயந்து போன ஆசிரியை அலறினார். அவரது கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதை பார்த்ததும் மாணவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மாணவர் தாக்கியதில் காயம் அடைந்த ஆசிரியை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் அவர் மாணவர் மீது கடையாலுமூடு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் மாணவர் தனது வீட்டிற்கு வந்து தன்னை தாக்கி கத்தியால் குத்தியதாக கூறி உள்ளார். 

இதைத் தொடர்ந்து கடையாலுமூடு போலீசார் அந்த மாணவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி வருவதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News