செய்திகள்
குஷ்பு

அரசியல் ஆதாயத்துக்காக ராஜீவ் கொலையை பயன்படுத்துவதா? - குஷ்பு ஆவேசம்

Published On 2019-10-19 07:39 GMT   |   Update On 2019-10-19 07:39 GMT
ராஜீவ் காந்தி கொலையை பயன்படுத்தி அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிக்க கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறி உள்ளார்.
சென்னை:

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் தளத்தில் ராஜீவ் காந்தியின் படுகொலை சம்பவம் விவாதிக்கப்படும் விதம் வேதனை அளிக்கிறது.

நாட்டின் பிரதமர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்தி பேசும் சீமானுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

கொலை செய்பவர்களும், கொலை குற்றவாளிகளும் தங்களுக்கு சாதகமாக எதையாவது காரணத்தை தேடுவது இயல்பு.

ஆனால் 7 பேர் விடுதலைக்காக பிரதமரை கொலை செய்ததை பெருமையாக பேசியும், ஆளாளுக்கு இதை சாதகமாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவது கண்டிக்கத்தக்கது.

அவர்களை விடுதலை செய்யும் முடிவு கவர்னிடம் கொடுக்கப்பட்டது. அவர் நிராகரித்து இருக்கிறார். இனிமேல் யார் என்ன சொல்ல முடியும்? இதற்கு சட்டம் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட குடும்பம் அவர்களை விடுதலை செய்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறிவிட்டது. ஆனால் அதற்கு மேல் நாடு என்று வரும்போது சட்டம் தான் முடிவு செய்ய முடியும்.



ராஜீவ்காந்தியோடு பழகியவர்களுக்கு அவர் எப்படிப்பட்ட தலைவர் என்பது தெரியும். மகாத்மா காந்தியோடு பழகியவர்களுக்கும், அவரைப்பற்றி தெரியும். அவர்கள் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே இன்று இருந்து இருந்தாலும் விடுதலை செய்யக்கூடாது என்று தான் சொல்வார்கள். அதே போல் தான் ராஜீவோடு பணியாற்றிவர்கள், பழகியவர்கள் அவரை கொலை செய்தவர்களை விடுவிக்கக்கூடாது என்கிறார்கள்.

கட்சி ரீதியாக இந்த விவகாரத்தை பேசும் தகுதி காங்கிரசுக்கு மட்டும் தான் உண்டு. ஏனெனில் அந்த கட்சி தங்கள் தலைவரை இழந்து இருக்கிறது.

என்னை பொறுத்தவரை ஆங்கிலத்தில் நீதி தாமதமானது மற்றும் மறுக்கப்பட்டது என்பார்கள். அதுதான் நடந்து இருக்கிறது.

தண்டனை வழங்கப்பட்டவர்கள் 28 ஆண்டுகள் ஜெயிலில் இருக்கிறார்கள். தங்களுக்கு தூக்கா, ஆயுளா என்று தெரியாமல் இருந்து இருக்கிறார்கள். ஆயுள் தண்டனை என்றால் இத்தனை ஆண்டுகள் தான் என்கிறார்கள். அதுவும் முடிந்து விட்டது.

எதுவாக இருந்தாலும் சட்டம் தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதை வைத்து அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிக்க கூடாது.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

Tags:    

Similar News