செய்திகள்
நகை பறிப்பு

ராஜாக்கமங்கலம் அருகே வங்கி ஊழியர் மனைவியிடம் 15 பவுன் நகை பறிப்பு

Published On 2019-10-18 10:32 GMT   |   Update On 2019-10-18 10:32 GMT
ராஜாக்கமங்கலம் அருகே வங்கி ஊழியர் மனைவியிடம் இருந்து 15 பவுன் நகையை பறித்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

ராஜாக்கமங்கலம் அருகே பூவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், ஈத்தாமொழியில் உள்ள வங்கி ஒன்றில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி நிஷா, (36). இவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். நிஷாவுடன் அவரது தாயார் விமலா குமாரி வசித்து வருகிறார். நேற்று காலை ரமேஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். இரவு வீட்டிற்கு வருவதற்கு தாமதம் ஏற்பட்டது.

வீட்டில் நிஷாவும், அவரது தாயார் விமலா குமாரியும் இருந்தனர். நிஷா ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர், ஜன்னல் வழியாக கையை விட்டு நிஷாவின் கழுத்தில் கிடந்த 15 பவுன் செயினை பறித்தார்.

இதையடுத்து நிஷா, செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். இருப்பினும் கொள்ளையன் செயினை பறித்து விட்டு தப்பியோடி விட்டார். செயினின் டாலர் மட்டும் வீட்டின் உள்ளே விழுந்தது. கொள்ளையன் செயினை பறித்துச் சென்றதையடுத்து நிஷா அலறினார். திருட்டுப் போன நகையின் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.

செயின் பறிக்கப்பட்டது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கநாடார், பிரான்சிஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

கொள்ளையன் குறித்த அடையாளங்களையும் நிஷாவிடம் கேட்டறிந்தனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை. இது குறித்து விமலாகுமாரி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
Tags:    

Similar News