செய்திகள்
சாலையை சீரமைக்க கோரிக்கை

விருதுநகர்-சாத்தூர் இடையே சேதமடைந்த 4 வழிச்சாலையை சீரமைக்க கோரிக்கை

Published On 2019-10-14 18:23 GMT   |   Update On 2019-10-14 18:23 GMT
விருதுநகர்-சாத்தூர் இடையே சேதமடைந்துள்ள 4 வழிச்சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்:

மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான 4 வழிச்சாலை விருதுநகர் வழியாக செல்கிறது. இதில் மதுரையில் இருந்து கள்ளிக்குடி வரையிலான 4 வழிச்சாலை சீரமைக்கப்பட்டு விட்டது. ஆனால் விருதுநகரில் இருந்து சாத்தூர் வரையிலான 4 வழிச்சாலை சேதமடைந்துள்ளது. பல இடங்களில் தடுப்பு வேலிகள் சேதமடைந்து வாகன போக்குவரத்து செல்லும் சாலைகளில் விழுந்து கிடக்கின்றன. இதனால் வாகன போக்குவரத்தும் இடர்பாடு ஏற்படுகிறது.

மேலும் விருதுநகர்-சாத்தூர் இடையே 4 வழிச்சாலையில் உள்ள பாலங்களும் சேதமடைந்துள்ளன. ஆர்.ஆர். நகரில் உள்ள மேம்பாலத்தில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்துள்ளது. ஆனாலும் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் வாகனங்களில் செல்லும் பொழுதே மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டுனர்கள் அச்சத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது.

ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டு பல பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படாவிட்டால் அந்த பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்யவும் அல்லது 50 சதவீத கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்துத்தான் பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நெடுஞ்சாலைகளை சீரமைத்துள்ளது. இதே நிலை விருதுநகர்-சாத்தூர் இடையே உள்ள சுங்கச்சாவடிக்கும் ஏற்பட்டு விடக்கூடாது.

எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விருதுநகர்-சாத்தூர் இடையே சேதமடைந்துள்ள 4 வழிச்சாலையை உடனடியாக சீரமைக்கவும் இப்பகுதியில் உள்ள மேம்பாலங்களில் ஏற்பட்டுள்ள இடிபாடுகளை சரிசெய்யவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே உள்ள மேம்பாலத்தில் பக்கவாட்டில் மண் சுவர் உள்ளதால் மழை காலத்தில் இந்த மண் சுவர் கரைந்து பாலத்திற்கு சேதம் ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. எனவே இதையும் நெடுஞ்சாலை ஆணையம் சீரமைக்க வேண்டியது அவசியம் ஆகும்.
Tags:    

Similar News