செய்திகள்
விபத்தில் பலியான பத்மநாபன்.

கிருமாம்பாக்கம் அருகே அரசு பஸ் மீது கார் மோதி என்ஜினீயர் நசுங்கி பலி

Published On 2019-10-02 13:08 GMT   |   Update On 2019-10-02 13:08 GMT
புதுவையில் உள்ள மனைவி-குழந்தையை பார்க்க வந்தபோது அரசு பஸ் மீது கார் மோதி என்ஜினீயர் நசுங்கி பலியானார்.

பாகூர்:

நாகை மாவட்டம் தாரங்கம்பாடி அருகே உள்ள சந்திரபாடியை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 30). என்ஜினீயரான அவர் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சபர்மதி புதுவை வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்தவர். அவர்களுக்கு திருமணமாகி 1½ மாதத்துக்கு முன்புதான் ஹென்னா என்ற பெண் குழந்தை பிறந்தது.

பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்த சபர்மதி குழந்தையுடன் இங்கேயே தங்கி இருந்தார்.

அவர்களை பார்ப்பதற்காக பத்மநாபன் இன்று காலை தாரங்கம்பாடியில் இருந்து காரில் புதுவை வந்தார். அவரே காரை தனியாக ஓட்டினார்.

அந்த கார் கிருமாம்பாக்கம் அருகே வந்தபோது அதற்கு முன்னால் ஒரு லாரி சென்றது. ரோட்டின் குறுக்கே பேரிகார்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதை லாரி கடந்து சென்றது. அப்போது பத்மநாபன் பேரிகார்டு இருப்பதை சரியாக கவனிக்கவில்லை.

இந்த நேரத்தில் எதிரே புதுவையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு அரசு பஸ் வந்தது. அந்த பஸ் மீது கார் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் பஸ்சுக்கு அடியில் சிக்கிய நிலையில் 150 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது.

கார் அப்பளம் போல நொறுங்கி சின்னாபின்னமாக கிடந்தது.

உடனே கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் அந்த இடத்திற்கு வந்தனர். அவர்கள் பஸ்சுக்கு அடியில் சிக்கி கிடந்த காரை மீட்டனர். உள்ளே பத்மநாபன் தலை மற்றும் உடல் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடல் மீட்கப்பட்டது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த முருகன் (50), சுந்தர் (32) உள்பட 20 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அதில் பலர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பஸ்சுக்குள் சொருகி கிடந்த காரை வெளியே இழுக்கும் பணியில் போக்குவரத்து போலீஸ்காரர்கள் சுபாஷ், ஸ்டாலின், பரமகுரு ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் கை மற்றும் உடல் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணிகளை அவர்கள் செய்தனர்.

இந்த விபத்தால் புதுவை - கடலூர் சாலையில் நீண்டநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News