செய்திகள்
கோப்பு படம்

தமிழகத்தில் 24, 25-ந்தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Published On 2019-09-21 01:35 GMT   |   Update On 2019-09-21 01:40 GMT
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வருகிற 24, 25-ந்தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 18-ந்தேதி ஒரே நாளில் திருவள்ளூரில் 22 செ.மீ. மழை பதிவாகியது. இதேபோல், தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சென்னைக்கு அருகே வந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றுவிட்டது. இந்த மேலடுக்கு சுழற்சியால் தான் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்தது.

அதற்கு அடுத்தபடியாக ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி சென்னை அருகே இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது:-

சென்னைக்கு அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், உள் மற்றும் மத்திய மாவட்டங்களில் சில இடங்களில் 3 நாட்களுக்கு (23-ந்தேதி வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதில் 21(இன்றும்), 22(நாளையும்)-ந்தேதிகளில் திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி வங்கக்கடலில் உருவாகி, சென்னைக்கு கீழே வருகிற 23-ந்தேதி(திங்கட்கிழமை) இரவு வருகிறது. இதனால் வருகிற 24, 25-ந்தேதிகளில் சில இடங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, சேலம் மாவட்டங்களில் பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், உடையளிபட்டி 7 செ.மீ., தஞ்சாவூர் 6 செ.மீ., திருமயம், கமுதி, வல்லம், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, ஆத்தூர், வலங்கைமான், சிவகங்கை, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, தேவகோட்டை, காரைக்குடியில் தலா 5 செ.மீ., கீரனூர், சோழவரம், பெருங்கலூர், தஞ்சாவூர், கும்பகோணத்தில் தலா 4 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்துள்ளது. 
Tags:    

Similar News