செய்திகள்
மாணவன் உதித் சூர்யா மற்றும் ஹால்டிக்கெட்டில் இருந்த புகைப்படம்

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் - மாணவரை தேடுகிறது தனிப்படை

Published On 2019-09-19 06:23 GMT   |   Update On 2019-09-19 06:23 GMT
நீட் தேர்வில் ஆள் மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித் சூர்யாவை பிடிக்க டி.எஸ்.பி. சீனிவாசன் மேற்பார்வையில் 7 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

மருத்துவ படிப்புக்காக நடத்தப்படும் மிக முக்கியமான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் மாணவர் ஒருவர் தேர்வு எழுதி மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவரின் பெயர் உதித் சூர்யா.

தேனாம்பேட்டையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசனின் மகன். மும்பையில் நடந்த தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காட்டி, தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார்.

அவர் ஆள்மாறாட்டம் மூலமாக டாக்டர் படிப்பில் சேர்ந்துள்ளதாக தேனி மருத்துவ கல்லூரி நிர்வாகத்துக்கு இ-மெயிலில் புகார் அனுப்பப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து உதித் சூர்யாவை அழைத்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது.

உதித்சூர்யாவின் நீட் தேர்வு ஹால் டிக்கெட்டில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படமும், அவரது தற்போதைய தோற்றமும் வேறு வேறாக இருந்தன.

இதுபற்றி அவரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டன. இதற்கு விளக்கம் அளித்த மாணவர் உதித்சூர்யா, ஹால்டிக்கெட்டில் இருப்பது எனது பழைய போட்டோ என்றும், ஏற்கனவே 2 முறை நீட் தேர்வை எழுதி தோல்வி அடைந்ததால் 3-வதாக மும்பையில் நடந்த நீட் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றதாகவும் தெரிவித்தார்.

தனது ஆள்மாறாட்ட மோசடி, கல்லூரி நிர்வாகத்துக்கு தெரிந்து விட்டதால் அதிர்ச்சியில் உறைந்துபோன உதித்சூர்யா, “நீங்கள் நடத்திய விசாரணையில் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது, இதற்கு மேல் இங்கு படிக்க விருப்பமில்லை” என்றும் கூறிவிட்டு படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறிவிட்டார்.

இதுதொடர்பாக கடிதம் ஒன்றை எழுதிய உதித்சூர்யா, அதனை மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினரிடம் முறைப்படி கொடுத்துவிட்டு கல்லூரிக்கு செல்லாமல் நின்று கொண்டார்.

மாணவர் உதித்சூர்யாவின் ஆள்மாறாட்ட மோசடி குறித்து டெல்லியில் உள்ள மருத்துவ அதிகாரிகளுக்கும், தமிழக சுகாதார துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த சென்னையில் உள்ள உதித்சூர்யாவின் வீட்டுக்கு அதிகாரிகள் சென்றனர். அங்கு உதித்சூர்யா இல்லை. இதனைதொடர்ந்து தேனி மருத்துவ கல்லூரி சார்பில், தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தேனி போலீசார் மாணவர் உதித்சூர்யா மற்றும் அவருக்காக தேர்வு எழுதிய நபர் ஆகியோர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

2 பேர் மீதும் ஆள் மாறாட்டம் செய்வது (419 ஐ.பி.சி.), மோசடி(420 ஐ.பி.சி.), 120 - பி (அரசு துறைகளை ஏமாற்றும் வகையில் கூட்டாக சதி செய்தல் உள்ளிட்ட 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர் உதித்சூர்யாவுக்காக மும்பை சென்று வேறு ஒரு நபர் தேர்வு எழுதியுள்ளார். அவரும் மாணவராகவே இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.



அந்த நபர் தேர்வு மையத்தில் காட்டி தேர்வு எழுதிய ஹால்டிக்கெட் போட்டோவை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மும்பையில் உதித் சூர்யாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த தேர்வு எழுதிய அறையை கண்டுபிடித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளையும் சேகரிக்க திட்டமிடப்பட்டள்ளது. இதன்மூலம் ஆள்மாறாட்ட நபரை பிடிக்க பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறும்போது, “மாணவர் உதித் சூர்யாவை பிடிக்க டி.எஸ்.பி. சீனிவாசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் உஷா தலைமையில் 7 சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே சென்னையில் உள்ள சுகாதாரத்துறை இயக்குனரகத்தில் நேரில் விளக்கம் அளிப்பதற்காக தேனி மருத்துவ கல்லூரி டீன் ராஜேந்திரன் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் சென்னை விரைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவ கல்லூரி இயக்குனர் (பொறுப்பு) நாராயண பாபு கூறியதாவது:-

சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா நீட் தேர்வில் 385 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார். கவுன்சிலிங் வந்தபோது பழைய புகைப்படத்தை வைத்திருந்தார். அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. நீட் தேர்வை இவர்தான் எழுதினாரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆள் மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் சேர்ந்த மருத்துவ படிப்பு இடம் காலியானதாக அறிவிக்கப்படும். மேலும் அவர் மருத்துவ படிப்பில் இருந்தும் நீக்கப்படுவார். இதே போல் மற்ற கல்லூரிகளிலும் ஆள் மாறாட்டம் நடந்துள்ளதா? என்பதை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News