செய்திகள்
பாஜக

அரிசிக்கு பதிலாக பணம் கேட்டு பாஜக போராட்டம்

Published On 2019-09-12 09:41 GMT   |   Update On 2019-09-12 09:41 GMT
விடுபட்ட 17 மாதத்திற்கு அரிசிக்கு பதிலாக ரொக்கப் பணமும், மாதந்தோறும் அரிசிக்கு பதிலாக பணமும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் புதுவை மாநில பா.ஜனதா சார்பில் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி:

புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலம் சிகப்பு ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு மாதம் 20 கிலோ, மஞ்சள் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்பட்டு வந்தது.

இலவச அரிசிக்கு பதிலாக ரொக்கப்பணமாக வழங்க வேண்டும் என கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டதால் அரிசி வழங்குவது தடைபட்டது. இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 39 மாதங்களில் 17 மாதங்களுக்கு அரிசியும், 5 மாதத்திற்கு பணமும் வழங்கப்பட்டது. மீதமுள்ள 17 மாதத்திற்கு அரிசி வழங்கப்படவில்லை.

விடுபட்ட 17 மாதத்திற்கு அரிசிக்கு பதிலாக ரொக்கப் பணமும், மாதந்தோறும் அரிசிக்கு பதிலாக பணமும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், அரிசி வினியோகத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும் புதுவை மாநில பா.ஜனதா இளைஞரணி, மகளிரணி சார்பில் குடிமைப்பொருள் வழங்கல்துறையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி இன்று பா.ஜனதாவினர் கிழக்கு கடற்கரை சாலை அரசு அச்சகம் முன்பு ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு இளைஞரணி பொதுச்செயலாளர் ஆனந்தன், மகளிரணி தலைவி விஜயலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., துணைத்தலைவர்கள் செல்வம், ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், இளைஞரணி கோவேந்தன், வேல்முருகன், விசிசி.நாகராஜன், லால், மகளிரணி அனிதா, ஹேமாமாலினி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அவர்களை குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகம் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதாவினர் கோ‌ஷம் எழுப்பினர்.

போலீசாரின் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தடுப்புகளை தள்ளிவிட்டு குடிமைப்பொருள் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். போலீசார் அலுவலக நுழைவு வாயிலில் பா.ஜனதாவினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
Tags:    

Similar News