செய்திகள்
தக்காளி

அய்யலூர் சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி- விவசாயிகள் கவலை

Published On 2019-08-28 08:57 GMT   |   Update On 2019-08-28 08:57 GMT
அய்யலூர் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

வடமதுரை:

திண்டுக்கல் அருகே அய்யலூரில் தக்காளிக்கென தனி சந்தை உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளான வடமதுரை, மோர்ப்பட்டி, தீத்தா கிழவனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தக்காளிகளை இங்கே கொண்டு வருகின்றனர்.

திருச்சி, சேலம், தஞ்சை, புதுக்கோட்டை, நத்தம் பகுதிகளில் இருந்து விவசாயிகள் இவற்றை கொள்முதல் செய்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனையானது. மேலும் ஓரளவு மழை பெய்ததால் விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டனர்.

மேலும் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்ததால் சொட்டு நீர் பாசம், பண்ணை குட்டை அமைத்து பயிர்களை காப்பாற்றி வந்தனர். வரத்து குறைந்ததால் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ. 150க்கும் மட்டுமே விலை கேட்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். 1 கிலோ ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெளி சந்தையில் ரூ.15 முதல் ரூ.20 வரை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

பல்வேறு இன்னல்களுக்கு இடையே தொடர்ந்து தக்காளி பயிரிட்டு வரும் தங்களுக்கு லாபம் கிடைக்காத போதும் பறிப்பு கூலிக்காவது பணம் கிடைக்க வேண்டும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

ஆனால் பெரும்பாலும் வெளி மாநிலத்தில் இருந்து வரத்து உள்ளதால் உள்ளூர் தக்காளி விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்தனர். நீண்ட காலமாக இப்பகுதியில் தக்காளி குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் விரைந்து குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News