செய்திகள்
செயின் பறிப்பு

ஆரணியில் மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பு

Published On 2019-08-23 10:33 GMT   |   Update On 2019-08-23 10:33 GMT
ஆரணியில் மூதாட்டியிடம் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி:

ஆரணி அடுத்த பையூரை சேர்ந்தவர் நாதமுனி. இவரது மனைவி சாமுண்டிஸ்வரி (75) நாதமுனி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் சாமுண்டிஸ்வரி பையூரில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ஆரணி பெரியகடை வீதியில் வசித்து வரும் மகன் வீட்டிற்கு நேற்று மாலை சாமுண்டீஸ்வரி நடந்து வந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த வாலிபர் சாமுண்டீஸ்வரியை பின் தொடர்ந்து வந்து அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தார். இதனை எதிர்பார்க்காத சாமுண்டீஸ்வரி கத்தி கூச்சலிட்டார். பொதுமக்கள் அங்கு வருவதற்குள் பைக் ஆசாமி தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்து சாமுண்டீஸ்வரி ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பெரிய கடை வீதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த 7-ந் தேதி ஆரணி டவுன் அவுசிங் போர்ட்டில் பைனான்சியர் ஒருவரிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை பைக் கொள்ளையர்கள் பறித்து சென்றனர். அந்த வழக்கில் குற்றவாளிகளை போலீசார் கண்டு பிடிக்காத நிலையில் மீண்டும் பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியும் பீதியும் ஏற்படுத்தி உள்ளது.

இனியாவது போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்ற செயல்களை தடுக்க முன் வருவார்களா என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News