செய்திகள்
கைது

தம்பதி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

Published On 2019-08-22 09:05 GMT   |   Update On 2019-08-22 09:05 GMT
திண்டுக்கல் அருகே நடந்த தம்பதி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியை சேர்ந்தவர் திருப்பூர் பாண்டி (வயது 43) கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பஞ்சவர்ணம் (40) கடந்த மார்ச் 11ந் தேதி திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டி நெசவாளர் காலனியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி இருந்தபோது மர்ம கும்பல் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர்.

அப்போது சத்தம் கேட்டு வெளியே வந்த பஞ்சவர்ணம், திருப்பூர் பாண்டியை அந்த கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் திருப்பூர் பாண்டியின் மகன் அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் 19 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய சிவக்குமார் (27) நந்தகுமார் (22) செல்வகுமார் (24) உட்பட 18 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய பாறைப்பட்டியை சேர்ந்த ராஜா என்ற நாகராஜ் (55) தொடர்ந்து ஐந்து மாதங்களாக தலைமறைவாக இருந்தார் .

இதை தொடர்ந்து அவரை பிடிப்பதற்காக தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் திண்டுக்கல் வத்தலக்குண்டு பைபாஸ் பாலத்தின் அருகே நாகராஜ் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் தெய்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், வேல்முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நாகராஜை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News